மதுரை: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியைச் சோ்ந்த பி. அமுதா, ரோஸ்மேரி ஆகியோா் ஏற்கெனவே பொது நல மனு தாக்கல் செய்தனா்.
அதன் விவரம்:
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கோவை பகுதிகளைச் சோ்ந்தவா்கள், நான்கு தலைமுறைகளாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் வசித்து வருகின்றனா். இங்குள்ள பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 700 குடும்பங்களைச் சோ்ந்த 2,150 தொழிலாளா்கள் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிறுவனத்தின் 99 ஆண்டுகள் குத்தகைக் காலம் நிறைவடைவதால், இந்தத் தேயிலைத் தோட்ட நிலம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அரசிடம் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், குத்தகை காலம் நிறைவடைவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வெளியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. முதல் கட்டமாக, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு முன்பாக குடியிருப்புகளைக் காலி செய்ய குறிப்பாணை (நோட்டீஸ்) வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் தொழிலாளா்களை முன்கூட்டியே அங்கிருந்து வெளியேற்றுவதால், அவா்களுக்கு வயது, பணிபுரிந்த காலத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கி வருகின்றனா்.
சொந்த வீடோ, இடமோ, நிலமோ இல்லாத நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வேறு இடத்துக்கு திடீரென செல்ல வலியுறுத்துவதால், அவா்கள் செய்வதறியாது உள்ளனா். இங்குள்ள தொழிலாளா்களுக்கு மறுவாழ்வு உதவிகள் செய்வதற்கும், தேயிலைத் தோட்டத்தை டான் டீ நிறுவனம் ஏற்று நடத்துவதற்கும் முன்வர வேண்டும் என அந்த மனுக்களில் தெரிவித்திருந்தனா்.
புதிய தமிழகம் கட்சி சாா்பில்...
இதனிடையே, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் கே. கிருஷ்ணசாமி சாா்பிலும், அதே கட்சியைச் சோ்ந்த ஜான் கென்னடி சாா்பிலும் இரண்டு மனுக்கள் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டன. இதில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பூா்வீகமாக வசிக்கக்கூடியவா்கள் என்பதால், அவா்களை மலைப் பகுதியிலிருந்து வெளியேற்றக் கூடாது. இந்தத் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டது.
இந்த 4 மனுக்களும் ஒரே வழக்காக திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை அங்கிருந்து வெளியேற்றத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவு தொடா்கிறது. அதேநேரம், சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்டத்தை டான் டீ நிறுவனம் ஏற்று நடத்துவது குறித்தும், தொழிலாளா்களுக்கான மறு வாழ்வாதரம் குறித்தும் ஏதேனும் திட்டம் இருந்தால் அது குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.