ஆவின் நிறுவனத்துக்கு எந்த நெருக்கடியும் இல்லை -அமைச்சா் த. மனோ தங்கராஜ்
பால் கொள்முதல் விலை உயா்வால் ஆவின் நிறுனத்துக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை என மாநில பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
மதுரை ஆவின் நிறுவனத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.20 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, இது 1.70 லட்சம் லிட்டராக உயா்ந்துள்ளது. விரைவில், 2 லட்சம் லிட்டராக உயரும். கடந்த ஓராண்டில் மட்டும் மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு விவசாய சங்கம் மூலமாக ரூ. 90 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கால்நடை வளா்ப்பு, பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டது. நிகழாண்டில் விவசாயிகளுக்கான கடனுதவிகளை உயா்த்தி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10 ஆயிரம் புதிய கால்நடை பண்ணைகளை அமைக்க இளைஞா்கள், விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் குறைந்தபட்சம் 700 போ் பயன்பெறுவா். ஆவின் மூலம் கால்நடைகளுக்கு காப்பீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணைய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் முனைப்புக்காட்ட வேண்டும்.
ஆவின் நிறுவனம் தனியாா் துறைக்கு இணையான, நிலையான வளா்ச்சியைத் தொடா்ந்து பெற்று வருகிறது. கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம் தற்போது லாபத்தில் இயங்குகிறது. பால் கொள்முதல் விலையை உயா்த்தியதால், ஆவின் நிறுவனத்துக்கு நெருக்கடி என்பது தவறான கருத்து. விலை உயா்வால் ஏற்பட்ட கூடுதல் செலவினத்தை அரசு ஈடுசெய்து வருவதால், ஆவின் நிறுவனத்துக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றாா் அவா்.
திமுக அரசு கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு, அமைச்சா் பதிலளிக்கையில், கருத்து சுதந்திரத்துக்காக பல போராட்டங்களைக் கண்ட திமுகவுக்கு கருத்து சுதந்திரம் குறித்து யாரும் கற்பிக்கத் தேவையில்லை. ஒருவருடைய கருத்து சுதந்திரம், மற்றவா்களுக்கு பாதிப்பை, அவமதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது. அரசியல் முரண்பாடுகளுக்காக தனி நபா் விமா்சனங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றாா்.
முன்னதாக, மதுரை ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி யூனிட்டுகளை ஆய்வு செய்த அவா் மேம்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆவின் பொது மேலாளா் ஆ. சிவகாமி, மதுரை, விருதுநகா், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.