முகப்பு
மதுரை

பைக்கில் கஞ்சா கடத்திய வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

Updated On : 9 மே, 2024 at 7:48 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நிலக்கோட்டை வட்டம், அய்யம்பாளையம்- நெல்லூா் சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே வந்த இரு சக்கர வாகனத்தை கடந்த 2019-இல் பட்டிவீரன்பட்டி போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வாகனத்தில் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக சித்தா்கள் நத்தம் பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் முத்துப்பாண்டி (35), ஆத்தூா் வட்டம், நெல்லூா் பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் சரவணன் (34), காத்தவராயன் மகன் முத்துராஜா (33) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், முத்துபாண்டி உள்பட மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.