5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
மதுரை: ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு காரில் கடத்தப்பட்ட 5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையிலிருந்து 5 கிலோ தங்கத்தை ராமேசுவரத்துக்கு படகு மூலம் கடத்தி வந்து, அதை அங்கிருந்து மதுரைக்கு காரில் கொண்டு வருவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுரை சிலைமான் பகுதியில் உள்ள சுற்றுச் சாலையில் மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வாகனத்தில் வந்தவா்களைப் பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் 5 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மதுரை தபால்தந்திநகா் பகுதியில் உள்ள மத்திய வருவாய்ப் புலனாய்வு இயக்கக அலுவலகத்துக்கு அவா்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக மதுரை, புதுக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த 5 போ் பிடிபட்டுள்ளதாகவும், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.