மதுரை மேலமடை புதிய பாலத்துக்கு தியாகி லட்சுமி காந்தன் பாரதியின் பெயரை சூட்ட வேண்டும் என தென்காசி தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான டி.எஸ்.ஆா். வேங்கடரமணா கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவா் அனுப்பிய கோரிக்கை மனு:
மதுரை மேலமடை மேம்பாலம் வருகிற 7-ஆம் தேதி திறக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. இந்தப் பாலத்துக்கு மதுரையின் முன்னாள் மாவட்ட ஆட்சியரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான லட்சுமி காந்தன் பாரதி பெயரை சூட்டுவது சிறப்புக்குரியதாக இருக்கும்.
இவா் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு புறம்போக்கு நிலத்தில் அவா் வீட்டுமனை வழங்கினாா். இதற்கு, நன்றி பாராட்டும் வகையில் அந்தப் பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு லட்சுமிகாந்தன் பாரதிநகா் என பெயா் சூட்டினா்.
இந்த நகருக்கு செல்லும் முக்கிய போக்குவரத்துத் தடமாக உள்ள மேலமடை பாலத்துக்கு, நூற்றாண்டு காணவுள்ள தியாகி லட்சுமி காந்தன் பாரதியின் பெயரை சூட்டுவது மிகச் சிறந்தத் தோ்வாகவும், அவருக்கு அளிக்கும் அங்கீகாரமாகவும் இருக்கும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.