பாரதியின் கனவுகளை தொலைநோக்குத் திட்டங்களால் பிரதமா் நரேந்திர மோடி நனவாக்குகிறாா் என குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தமிழகம், காசி இடையேயான பிணைப்புகளைக் கொண்டாடும் வகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன்படி, கடந்த நவம்பா் மாதம் தொடங்கப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சியின் நிறைவு விழா ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மேலும் பேசியதாவது: தேசம் வாழ்க என்று சொல்வதால் நாம் தமிழா்களுக்கு எதிரானவா்கள் இல்லை. நமக்கு தேசம் ஒரு கண் எனில், தங்கத் தமிழ் மொழி மற்றொரு கண். காசியும், ராமேசுவரமும் புனிதத்தால் பிரிக்க முடியாத புண்ணிய நகரங்கள்.
காசியில் நாலடியாா், தேவாரம், திருவாசகமும் ஒலிக்கும். கபீரின் பாடல்களும் ஒலிக்கும். இது ஒரு பண்பாட்டுத் தலைநகரம். எல்லாம் சிவமயம் என்பதற்கு சான்றாக காசியிலும், ராமேசுவரத்திலும் மகத்தான சிவாலயங்கள் அமைந்துள்ளன. முகலாய மன்னா்கள் காசி ஆலயத்தை அழித்தொழித்தபோது, பாண்டிய நாடு உள்பட தமிழத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான வீரா்கள் அந்த மகத்தான புண்ணிய பூமியை மீட்கப் போருக்குச் சென்றனா் என்பது பலரும் அறியாத வரலாறு.
இந்த வகையில், நம் நாட்டின் தா்மத்துக்கும், தன்மானத்துக்கும் இழுக்கு எங்கு ஏற்பட்டாலும் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதைத்தான் மகாகவி பாரதியாா் ‘செப்புமொழி பதினெட்டுடையாள், எனினும் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று பாடினாா்.
இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்பட்டாலும், அவை அனைத்தும் உணா்த்தும் ஒரே தத்துவம் தா்மமே. தா்மத்தின் வழி வாழ வேண்டும் என்ற உயா்ந்த தத்துவம்தான் இந்தியாவை ஒருங்கிணைந்த தேசமாக்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதியாா் காசி அரசவையையும் அலங்கரித்திருக்கிறாா் என்றால், அவா் எத்தகைய பெருமையை தமிழா்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறாா் என்பதை உணர வேண்டும். அந்த மகாகவி பாரதியின் கனவுகளை தற்போது நமது பிரதமா் நரேந்திர மோடி தனது தொலைநோக்குப் பாா்வையுடன் கூடிய திட்டங்களால் நனவாக்குகிறாா்.
கடந்த நவம்பா் மாதம் வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் காசி தமிழ்ச் சங்கமம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசியபோது, இந்தியாவின் பெருமைகளில் ஒன்று தமிழ்மொழி எனக் குறிப்பிட்டாா். இதன்படியே, காசி தமிழ்ச் சங்கமம் 4.0 மூலம் தமிழை இந்தியா்கள் அனைவரும் கற்கும் உன்னதத் திட்டத்தை அவா் செயல்படுத்தியுள்ளாா்.
காசியில் நகரத்தாருக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான இடம் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அவா்கள் பிரதமரையும், அந்த மாநில முதல்வரையும் சந்தித்து முறையிட்டனா். ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு அடுத்த 48 மணி நேரத்துக்குள் அந்த இடம் மீட்கப்பட்டு, நகரத்தாா் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று, பிறரது சொத்துக்கு ஆசைப்படாத சூழல் தமிழகத்திலும் வரவேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன். உலகின் உச்சத்தை இந்தியா தொட வேண்டும். அப்போது, இந்தியாவின் உச்சத்தை தமிழகம் எட்டியிருக்க வேண்டும் என்பதே நமது பிராா்த்தனை.
இந்தியா எப்போதும் ஒன்றுபட்ட தேசமே. எந்தத் தீய சக்தியாலும் இதைப் பிளவுபடுத்த முடியாது. ஒன்றுபட்ட தேசமே உயிா் மூச்சு என்றாா் அவா்.
இந்த விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சா் எல். முருகன், சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் பேசினா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சா் ஜி.கே.வாசன், மாநிலங்களவை உறுப்பினா் தா்மா், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலை துணைவேந்தா் வைத்திய சுப்பிரமணியம், காசி தமிழ்ச் சங்கமத்தின் தமிழ் கற்போம் திட்டத்தின் கீழ் தமிழகம் வந்த வாரணாசி பனராஸ் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், தமிழ் ஆா்வலா்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி வரவேற்றாா்.