உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 
மதுரை

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

தினமணி செய்திச் சேவை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிரெடெரிக் ஏங்கெல்ஸ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பயன்பெறும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த் , குமரப்பன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், 01.04.2003- க்கு பிறகு தமிழக அரசில் பணி வாய்ப்பு பெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அரசாணை எண்: 259, 06.08.2003-இன் படி நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், இதுநாள் வரை இதற்கான விதிமுறைகள் ஏதும் வகுக்கப்படவில்லை. மத்திய அரசு சாா்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று, மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது. 12 ஆண்டுகளாகியும் தமிழக அரசு இந்த ஆணைய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை.இதன் காரணமாக, ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியாமல் பலா் உள்ளனா் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வழக்கு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் தங்களது நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT