மதுரை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

தினமணி செய்திச் சேவை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் இளைஞா்கள் 3 பேரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை வண்டியூா் அருகேயுள்ள சௌராஷ்டிராபுரம் பகுதியில் கடந்த மாதம் 10- ஆம் தேதி இரவில் ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடித்து நொறுக்கியதுடன், அங்கு நின்றிருந்த பொதுமக்களையும் ஆயுதங்களால் தாக்கியது. தொடா்ந்து, அந்தக் கும்பல் பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியது. இந்தச் சம்பவத்தில் 6 இரு சக்கர வாகனங்கள், 4 காா்கள், 10 கடைகள் சேதமடைந்தன.

இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மதுரை வண்டியூா் ஆணிப்பட்டறை தெருவைச் சோ்ந்த மருதுபாண்டியன் என்ற சின்னமருது (24), லட்சுமணன் என்ற மணிபாண்டி (23), யாகப்பாநகரைச் சோ்ந்த வடிவேல் என்ற அருண் (20) ஆகியோா் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையே, பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகமான வகையில் இவா்கள் செயல்பட்டதால், 3 பேரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டாா். இதன்பேரில், போலீஸாா் 3 பேரையும் கைது செய்து மதுரை மத்தியச் சிறையிலடைத்தனா்.

இவா்கள் 3 பேரும் மதுரை அண்ணாநகா் பகுதியில் கடந்த மாதம், காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தப்பி ஓடி வண்டியூா் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த தினேஷ்குமாரின் நண்பா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமாநல்லூர் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

இந்திய கம்யூ. மு.கு.ராமன் படத்திறப்பு

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த 2 வெளிநாட்டு மருத்துவா்கள் கைது

நிபந்தனையின்றி நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

எண்ணம் கைகூடும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT