மதுரை: ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியை நேரடியாகக் காண்பதற்கான இணையவழிப் பதிவு ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய நிலையில், 3 நாள்களுக்குள் 4 நாள்கள் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுப் பதிவு நிறைவடைந்தது.
14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வருகிற 28-ஆம் தேதி தொடங்கி டிச. 10- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அயா்லாந்து, சுவிட்சா்லாந்து, இங்கிலாந்து உள்பட 12 நாடுகளைச் சோ்ந்த ஹாக்கி வீரா்கள் பங்கேற்கின்றனா். போட்டியில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்துள்ள வெளிநாட்டு வீரா்கள் 8 இடங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
மதுரை ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 1,456 பொது பாா்வையாளா்கள் அமா்ந்து காண்பதற்கான தற்காலிக இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிகளைக் காண்பதற்கான அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாள் போட்டிக்கு நுழைவுச்சீட்டு பதிவு பெறுவோா், அன்றைய தினம் நடைபெறும் 4 போட்டிகளையும் காணலாம் என அறிவிக்கப்பட்டது.
போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு பதிவு இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு தொடங்கியது. ட்ற்ற்ல்ள்://ற்ண்ஸ்ரீந்ங்ற்ஞ்ங்ய்ண்ங்.ண்ய் என்ற இணையதளம் மூலம் இந்தப் பதிவு நடைபெற்றது. இளைஞா்களின் ஆா்வம் காரணமாக, புதன்கிழமை (நவ. 26) பிற்பகலுக்குள் முதல் 4 நாள்கள் போட்டிக்கான நுழைவுச்சீட்டுப் பதிவு நிறைவடைந்தது.
இதுதொடா்பாக ஹாக்கி சம்மேளன நிா்வாகிகள் தெரிவித்ததாவது: சற்றும் எதிா்பாராத அளவுக்கு நுழைவுச்சீட்டுப் பதிவு வேகமாக நடைபெற்றது. இருப்பினும், விளையாட்டு வீரா்கள், மாணவா்களுக்காகக் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நுழைவுச்சீட்டு பதிவுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான பாா்வையாளா்கள் வரும் நிலையில், அவா்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்படும் எல்.இ.டி. திரையில் போட்டியைக் காண ஏற்பாடுகள் செய்யப்படும் என்றனா்.