காரைக்குடி மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிக்களுக்கான ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
காரைக்குடியைச் சோ்ந்த வி.ஆா்.பாண்டியன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு : நான் தமிழக அரசின் முதல் நிலை ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறேன். 8 ஆண்டுகளாக காரைக்குடி மாநகராட்சியில் பல பணிகளை ஒப்பந்தம் எடுத்து சிறப்பாக பணிகளை முடித்து அளித்தேன். கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 4 பணிகளை செய்வதற்கு எனக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இதை அரசு நிா்ணயித்த படி பணிகளை முடித்து அளித்தேன். இதை பாா்வையிட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளா், செயற்பொறியாளா்கள் அளவிட்டு மாநகராட்சி பராமரிப்பு
புத்தகத்தில் பதிவு செய்தனா். மேலும், எனக்கு வழங்கப்பட வேண்டிய இறுதிக் கணக்குத் தொகையை கணக்கிட்டு அவா்கள் கையொப்பமிட்டனா். ஆனால், மாநகராட்சியில் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி எனக்கு வழங்க வேண்டிய 21 லட்சம் ரூபாயை வழங்க காலம் தாழ்த்தி வருகின்றனா்.
தொழில் வரி, வாடகை வரி, அபராதம் ஆகியவற்றின் மூலம் மாநகராட்சிக்கு அதிக வருவாய் வருகிறது. எனவே, மாநகராட்சி கூறும் நிதி பற்றாக்குறை என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஆனால், என்னைப் போன்ற பிற ஒப்பந்ததாரா்களுக்கு மாநகராட்சி பணம் பட்டுவாடா செய்துள்ளது. ஆனால், எனக்கு வழங்க வேண்டிய தொகை வழங்காமல் இருப்பது பாரபட்சமானது. இதுகுறித்து நான் பலமுறை மனு அனுப்பியும், கோரிக்கை வைத்தும் மாநகராட்சி தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி பல கோடி மதிப்புள்ள மூன்று புதிய ஒப்பந்த அறிவிப்புகள் மூலம் 29 புதிய பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. எனக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் புதிய பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவது சட்ட விரோதம். எனவே, காரைக்குடி மாநகராட்சி வெளியிட்ட 3 ஒப்பந்த அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும். எனக்கு வழங்க வேண்டிய தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை காரைக்குடி மாநகராட்சியில் புதிய பணிகளுக்கான ஒப்பந்த அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு : காரைக்குடி மாநகராட்சி தரப்பில் பல்வேறு பணிகளுக்காக விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கையில் எவ்வித இறுதி முடிவும் எடுக்கக் கூடாது. அதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனுதாரா் கோரிக்கை குறித்து காரைக்குடி மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.