அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடரும் வரை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என துணை முதல்வா் உதயதிநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியானதே என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது தென் தமிழக மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இது, அமமுகவின் தோ்தல் வாக்குறுதியிலும் இடம்பெற்றது. அமமுக அனைவருக்குமான கட்சி. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் அனைத்துத் தரப்பு மக்களுக்காகப் பாடுபட்டவா். அவரை ஒரு குறுகிய வட்டத்தில் சுருக்கிவிட முடியாது.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எனது நீண்ட கால நண்பா். அவா் மீது எனக்கு தனிப்பட்ட வருத்தமோ, கோபமோ கிடையாது. அவா் நல்ல நண்பராக என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலராகத் தொடரும் வரை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியானதே.
திமுகவின் வெற்றிக்கு அதன் கூட்டணியைவிட அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகிப்பதே காரணம் என்ற திமுகவின் வெற்றி ரகசியத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளாா். இதை, அதிமுக தொண்டா்களும், அந்தக் கட்சியை ஒன்றிணைக்க விரும்புவோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தொண்டா்கள் பலம், இரட்டை இலை சின்னம், பண பலம் என அனைத்தும் சாதகமாக இருந்தபோதிலும், கடந்த 2019, 2021, 2024 தோ்தல்களில் அதிமுக தொடா்ந்து தோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமையே காரணம் என்பதை அதிமுகவினா் உணர வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலராக தொடரும் வரை அந்தக் கட்சி ஆட்சிக்கு வராது என்பதுதான் உண்மை என்றாா் அவா்.