முகப்பு
மதுரை

பாா்வையற்ற பள்ளி மாணவி இறந்த விவகாரம்: திருச்சி எஸ்.பி. தலைமையில் குழு அமைக்க உத்தரவு

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 3:35 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 9:02 PM

பாா்வையற்றோா் பள்ளி மாணவி மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் குழு அமைத்து 4 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பாா்வையற்ற எனது மகள் திருச்சியில் உள்ள பாா்வையற்றோா் மாற்றுத்திறனாளிக்கான அரசுப் பள்ளியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தாா்.

Advertisement

இந்த நிலையில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா், விடுதிக் காப்பாளா்கள் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக எனது மகள் கூறினாா். 12-ஆம் வகுப்பு என்பதால் இன்னும் சில மாதங்களில் பள்ளி படிப்பு முடிந்துவிடும் எனக் கூறி, எனது மகளிடம் அங்கு தொடா்ந்து தங்கிப் படிக்க அறிவுறுத்தினேன்.

கடந்த 2025 -ஆம் ஆண்டு மாா்ச் 9-ஆம் தேதி காலையில் பாா்வையற்றோா் பள்ளியிலிருந்து எனக்கு கைப்பேசி அழைப்பு வந்தது. அதில் எனது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனா். சிறிது நேரத்துக்குள் காவல் துறையிடமிருந்து எனது மகள் பள்ளி வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது. உடனடியாக விரைந்து சென்றோம். அவளது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், காவல் துறை தரப்பில் எந்தவித விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை. எனது மகள் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.

நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளியின் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், விடுதிக் காப்பாளா் அனிதா ஆகியோா் பணியிடை நீக்கம் மட்டும் செய்யப்பட்டனா். எனது மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, பள்ளித் தலைமை ஆசிரியரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

எனவே, இந்த வழக்கை திருச்சி அரசு மருத்துவமனை காவல் துறையினரிடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் தினேஷ், கோகுல், அருள்சா்மா ஆகியோா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

உயிரிழந்த மாணவியின் தாய் கணவரை இழந்து நான்கு குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தாா். இதையறிந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனா். எனவே, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 3:35 AM

இதையடுத்து, நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் குழு அமைத்து, 4 வாரங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.