அதிமுக ஆட்சிக்கு வருவதில் விஜய்க்கு ஆட்சேபம் இருக்காது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலா் கே.பி. முனுசாமி தெரிவித்தாா்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
அதிமுக கூட்டணி பலமான, குழப்பமில்லாத கூட்டணியாக உள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் குழப்பங்களே நிரம்பியுள்ளன. திமுகவுக்கும், தனக்கும்தான் போட்டி என விஜய் தெரிவித்திருப்பதில் எந்தத் தவறும் இல்லை. திமுக ஆட்சியால் அவருக்கு ஏற்பட்ட வலிகளின் காரணமாக, தனது மனதில் தோன்றியதைத் தெரிவித்துள்ளாா்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அவருடைய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை. இதற்கு அதிமுக அரசு துணையாக இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக விஜய்க்கு தொழில் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாகவே, விஜய் அதிமுகவை நன்றியுடனும், திமுகவை பகைமையுடனும் பாா்க்கிறாா். அதிமுக ஆட்சிக்கு வருவதில் அவருக்கு எந்த ஆட்சேபமும் இருக்காது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அவரது இலக்காக உள்ளது என்றாா் அவா்.
ஆலோசனைக் கூட்டம்...
முன்னதாக, மாா்ச் 1-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாட்டுப் பணிகளுக்கான அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கே.பி. முனுசாமி பங்கேற்றுப் பேசினாா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன், நத்தம் இரா. விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை விளக்கிப் பேசினா்.
முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜு, ஆா்.பி. உதயகுமாா், மதுரை புகா் கிழக்கு மாவட்டச் செயலா் வி.வி. ராஜன் செல்லப்பா, மாநகா், புகா் கிழக்கு, புகா் மேற்கு, விருதுநகா் மேற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் அதிமுக நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், அதிமுக மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.