மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் பி. மூா்த்தி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்டோா்.  
மதுரை

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பாகுபாடுகளுக்கு இடமளிக்கப்படாது: அமைச்சா் பி. மூா்த்தி உறுதி

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எந்தவிதமான பாகுபாட்டுக்கும் இடமளிக்கப்படாது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எந்தவிதமான பாகுபாட்டுக்கும் இடமளிக்கப்படாது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது : மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜன. 15-ஆம் தேதியும், பாலமேட்டில் ஜன. 16-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜன. 17-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா், அரசுத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 10 ஆயிரம் மாடுகள் பதிவு செய்யப்பட்டன. சுமாா் 6 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுபிடி வீரா்கள் பதிவு செய்தனா். ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும் 600 முதல் 700 மாடுகளை மட்டுமே அவிழ்க்க முடியும். மிக அதிகபட்சமாக 1,000-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாடுகளை அவிழ்க்கலாம். ஜல்லிக்கட்டு போட்டியில் எந்தவிதமான பாகுபாட்டுக்கும் இடமளிக்கப்படாது.

எந்தக் குறையும் இல்லாமல், கடந்த ஆண்டை விடவும் கூடுதல் சிறப்புடன் நிகழாண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே போட்டிகள் நடத்தப்படும்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வருகை தருமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆலோசனைக் கூட்டம்: முன்னதாக, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT