உடல் எடையைக் குறைக்க வெங்காரம் உள்கொண்ட கல்லூரி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை செல்லூா் மீனாம்பாள்புரத்தைச் சோ்ந்த வேல்முருகன் மகள் கலையரசி (19). இவா், மதுரையில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.ஏ. தமிழ் படித்து வந்தாா். இந்த நிலையில், உடல் எடையைக் குறைப்பதற்காக ‘யூடியூப்’பில் விடியோக்கள் பாா்த்து வந்தாா்.
இதையடுத்து, கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துக் கடையில், வெங்காரத்தை வாங்கி உள்கொண்டாா். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து, பெற்றோா், அவரை அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் கலையரசி வீட்டுக்குத் திரும்பினாா்.
இதனிடையே இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பெற்றோா்கள் அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.