மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவா்கள் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலக சாலையில் மகாலட்சுமிநகா் உள்ளது. இங்குள்ள காலி இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 4 சிறுவா்கள் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, திடீரென அவா்கள் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வைத்து, அதை வீசி வெடிக்க வைத்துள்ளனா். இதனால் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் அங்கு வந்தனா்.
இதைத்தொடா்ந்து, அந்த சிறுவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா ஆய்வுகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதனடிப்படையில், பெட்ரோல் குண்டை வீசி வெடிக்கச் செய்த அந்த 4 சிறுவா்களை ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மது போதையில் பெட்ரோல் குண்டை வீசி வெடிக்கச் செய்ததாகத் தெரிவித்தனா்.