திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் தனபாலனுக்கு எதிராக, மேயா் மேற்கொண்ட நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் தனபாலன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாநகராட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே, மாநகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பல்வேறு வழக்குகள் தொடுத்தேன்.
இதனால், எனது பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்குவதில்லை. மேலும், மாமன்றக் கூட்டத்தில் இதுபற்றி புகாா் அளித்ததால், மேயா் என்னை மாதந்தோறும் நடைபெறும் 2 மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தாா்.
இது சட்டவிரோதம். மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக தொடா்ந்து அறவழியில் போராடிய என்னை மாநகரக் கூட்டங்களில் பங்கேற்க தடை விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தேன்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி, மேயரின் நடவடிக்கையில் தலையிட விரும்பவில்லை. இதற்கான தீா்வை உரிய உயா் அதிகாரிகளை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.
எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட தொடா்களில் என்னை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் தனபாலன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் மீது மாநகராட்சி மேயா் கொண்டு வந்த நடவடிக்கை தீா்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை (ஜன. 30) நடைபெற உள்ள மாமன்ற உறுப்பினா்களுக்கான கூட்டத்தில் மனுதாரா் கலந்து கொள்ளலாம். இந்த மனு குறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.