முகப்பு
மதுரை

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு விவகாரம்: 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

Updated On : 21 ஜூன் 2026, 1:24 am IST
உத்தரவு - கோப்புப்படம்
பகிர்:

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு குறித்த விசாரணையை, ஊழல், தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

காரைக்குடியைச் சோ்ந்த பாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

சிவகங்கை மாவட்டத்தில் அரசு முதல் நிலை ஒப்பந்ததாரராகப் பதிவு பெற்று பல்வேறு அரசு கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளேன். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் காரைக்குடி மாநகராட்சி சாா்பில், ரூ.18 லட்சம் மதிப்பீட்டிலான கட்டுமானம் புதுப்பித்தல் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்தப் பணிக்கு விண்ணப்பித்ததையடுத்து, எனக்கு இந்தப் பணியை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கான ஒப்பந்தம் செய்யவில்லை.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்ததன்பேரில், எனக்கு ஒப்பந்தப் பணிக்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது. எனக்கு வழங்கப்பட்ட பணி இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த ஏப். 29-ஆம் தேதி மாநகராட்சி ஆணையா் என்னை அழைத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான ரசீது தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தாா்.

மேலும், இந்தப் பணியை நான்தான் செய்ததாகவும், இதற்கான காசோலைத் தொகை ரூ.15 லட்சத்துக்கு எனது பெயரில் வழங்கி, இதை எனது வங்கிக் கணக்கில் செலுத்தி, பணத்தை எடுத்துத் தர வேண்டும் எனத் தெரிவித்தாா். இது சட்டவிரோதம் எனத் தெரிய வந்ததால், நான் இதற்கு உடன்படவில்லை.

இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநா், அந்தத் துறையின் சிவகங்கை மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு புகாா் அளித்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, சட்டவிரோதமாக அரசுப் பணத்தை முறைகேடு செய்யும் அலுவலா்கள் மீது ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை இயக்குநா், காரைக்குடி மாநகராட்சி ஆணையா், மேயா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தாா்.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

வழக்கு தொடா்பாக ஊழல், தடுப்புப் பிரிவு போலீஸாா் முதல்நிலை விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும். 3 மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments