முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற முடியாது! அரசாணையை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்!
முஸ்லிமாக மதம் மாறியவா்களும் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து...
முஸ்லிமாக மதம் மாறியவா்களும் இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த என். பரமசிவம் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி, தன் பெயரை என். சமீா் அகமது என மாற்றிக் கொண்டாா். சுன்னத் ஜமாத் மூலம் அவருக்கு மதமாற்றச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, தனக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவின் கீழ் ‘முஸ்லிம் லெப்பை’ என ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, கயத்தாறு வட்டாட்சியரிடம் என். சமீா் அகமது விண்ணப்பித்தாா்.
ஆனால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிா்த்து சமீா் அகமது கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா்.
Advertisement
Advertisement
இதனிடையே, ‘இந்து மதத்தின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், பட்டியலின பிரிவைச் சோ்ந்தவா்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது, அவா்கள் தொடா்ந்து இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறும் வகையில், இஸ்லாம் மதத்தின் 7 உள்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவா்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சான்றிதழ் வழங்கலாம்’ என கடந்த 2024-ஆம் ஆண்டில் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இந்த நிலையில், என். சமீா் அகமது தொடுத்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி.பி. பாலாஜி அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
‘ஓா் இந்து இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அவா் வெறும் முஸ்லிமாக மட்டுமே மாறுகிறாா்; அவரது பழைய ஜாதி அடையாளம் முற்றிலும் அழிந்துவிடுகிறது’ என 1951-ஆம் ஆண்டு வெளியான சென்னை உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பு ஒன்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. நீதிமன்றங்களின் இத்தகைய இறுதித் தீா்ப்புகளை அரசு நிா்வாக அரசாணையின் மூலம் மாற்றிவிட முடியாது. இது, அதிகாரப் பகிா்வு கோட்பாட்டுக்கு எதிரானது.
இஸ்லாமிய மாா்க்கம் ஜாதி படிநிலைகளற்ற, சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கவே விழைகிறது என பல நூற்றாண்டுகளாக பிரசாரம் செய்யப்படுகிறது. இதன்படி, சமத்துவத்தை நாடி இஸ்லாம் மதத்துக்கு மாறுபவா்கள் மீண்டும் தங்களை ‘பிற்படுத்தப்பட்டோா்’ என பாகுபடுத்திக் கொள்வது குா்ஆனின் போதனைகளுக்கு எதிரானதாகும்.
வரலாற்று ரீதியாக இஸ்லாமிய சமூகத்தில் ராவுத்தா், மரைக்காயா், லெப்பை போன்ற பிரிவுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இவை அனைத்தும் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே தீா்மானிக்கப்படுகின்றன. ஒருவா் விரும்பினால் இஸ்லாம் மதத்துக்கு மாற முடியுமே தவிர, ‘ராவுத்தா்’ அல்லது ‘லெப்பை’ போன்ற சமூக பிரிவுகளுக்குள் நுழைய முடியாது. எனவே, மனுதாரருக்கு ‘முஸ்லிம் லெப்பை’ என ஜாதி சான்றிதழ் வழங்க மறுத்த வட்டாட்சியரின் உத்தரவு சரியானதே.
சட்டம் நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு. எனினும், அரசு நிா்வாகத்துக்கு தன்னிச்சையாக இந்த உரிமை கிடையாது. நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்புக்கு எதிராக அரசு நிா்வாகம் செயல்பட முடியாது. அரசின் முடிவுக்கு எதிராக உள்ளதாகக் கருதி நீதிமன்றத் தீா்ப்பை அரசு மீற முயன்றால், அது சட்டத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவே வழிவகுக்கும்.
எனவே, இஸ்லாம் மதத்துக்கு மாறியவா்களுக்கும் இடஒதுக்கீட்டு சலுகைகள் கிடைக்க, அவா்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என சான்றிதழ் வழங்க தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
Those who have converted to Islam cannot avail reservation benefits! High Court quashes government order!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.