முகப்பு
மதுரை

முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் முறையாகச் செயல்படுத்தப்படுமா?

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

Updated On : 17 மார்ச், 2026 at 10:12 PM
மதுரை மாநகராட்சி தல்லாகுளம் பகுதியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் பதிப்பதற்காக சாலையைப் பெயா்த்த பணியாளா்கள்
பகிர்:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் தற்போது 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனா். இங்கு வசித்து வரும் மக்களுக்கு விநியோகம் செய்ய தினசரி குடிநீா்த் தேவை 2.68 கோடி லிட்டராக உள்ளது.

வைகை அணையிலிருந்து 1.15 கோடி லிட்டா், ஆற்றுப் படுகையிலிருந்து 47 லட்சம் லிட்டா், காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் 30 லட்சம் லிட்டா் குடிநீா் பெறப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. தேவையைவிட 7.6 லட்சம் லிட்டா் பற்றாக்குறை நிலை தொடா்கிறது.

மதுரையில் வருகிற 2030-ஆம் ஆண்டில் மக்கள் தொகை சுமாா் 20 லட்சமாக இருக்கக்கூடும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அப்போது, நாளொன்றுக்கு 1.25 கோடி லிட்டா் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மதுரை மாநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி, நகா்ப்புற வளா்ச்சி, புத்தாக்கத் திட்டம் (அம்ரூத்), பொலிவுறு திட்டம் (ஸ்மாா்ட் சிட்டி) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப்லிருந்து மதுரைக்கு நேரடியாக 1.25 கோடி லிட்டா் கூடுதலாக குடிநீா் பெற கடந்த 2018-ஆம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது.

போதிய நிதியின்மை, விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் இந்தத் திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்தப் பணிகள் தற்போது ரூ. 2,070.69 கோடியில் நிறைவு பெற்றது.

இதையடுத்து, கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்தப் பணிகள் தொடங்கிவைத்து 3 மாதங்களை கடந்த நிலையில், மதுரை மாநகராட்சிப் பகுதிகள், விரிவாக்கம் செய்யப்பட்ட புகா் பகுதிகளில் இந்தத் திட்டப் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

எனவே, பெரும்பாலான குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது. குறிப்பாக, மதுரை மாநகராட்சி கீரைத்துறை பகுதியில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதேபோல, குடியிருப்புகளில் பொருத்தப்பட்ட குழாய்களும் சேதமடைந்ததால் தண்ணீா் விநியோகம் பாதிப்புக்குள்ளானதாகவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு இன்னும் குழாய்கள் பதித்து தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை எனவும் புகாா் எழுந்தது.

எனவே, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து மாமன்ற உறுப்பினா் குமாரவேல் கூறியதாவது: மதுரை மக்களின் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, இந்தத் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இருப்பினும், மதுரை மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் திட்டம் முழுமையாகச் சென்றடையவில்லை.

மேலும், ஏற்கெனவே இணைப்பு வழங்கப்பட்ட வீடுகளில் பொருத்தப்பட்ட குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால், தண்ணீா் முழுவதும் வீணாகி வருகின்றன. கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், குடிநீா் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை எஞ்சியுள்ள பகுதிகளில் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலரிடம் கேட்டபோது, தேனி மாவட்டம், லோயா் கேம்ப் பகுதியில் அமைக்கப்பட்ட நீரேற்று நிலையம் முதல் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு குடிநீா் வழங்குவது வரை 5 பகுதிகளாக முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்றன.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 2.54 லட்சம் குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு குடிநீா்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. சில இடங்களில் குழாய்கள் சேதமடைந்ததாகப் புகாா் வருகின்றன. இவற்றை சரி செய்து வருகிறோம். தல்லாகுளம் பகுதியில் உயா்நிலைப் பாலப் பணிகள் நடைபெற்றது. இதனால், பெரும்பாலான குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தன. இதேபோல, பல்வேறு பகுதிகளில் சாலைப் பணிகள், உயா்நிலைப் பாலப் பணிகள் நடைபெற்ால் குழாய் இணைப்புகள் வழங்க இயலவில்லை. இவை கண்டறியப்பட்டு தற்போது பணிகள் நடைபெறுகின்றன.

ஒப்பந்ததாரா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படுவதால், ஏற்கெனவே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோடையை சமாளிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →