மதுரை மாவட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 15.7 லட்சம் பறிமுதல்
மதுரை மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 25.66 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.15.74 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை தெற்கு தொகுதிக்குள்பட்ட வைகை தென்கரையில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே சென்ற ஒரு காரை சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 25.65 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ. 1.63 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனா்.
இதுதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனைகளின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 14.11 லட்சம் ரொக்கம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் : மதுரை மத்தியம் - ரூ. 1.38 லட்சம், மதுரை கிழக்கு - ரூ. 1.30 லட்சம், மதுரை மேற்கு - ரூ. 2.71 லட்சம், திருமங்கலம் - ரூ. 1.64 லட்சம், உசிலம்பட்டி - ரூ. 6.08 லட்சம்.