ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் தரமற்ற உணவு: மாணவா்கள் அவதி
வாடிப்பட்டி ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவா்கள் கவலை தெரிவித்தனா்.
வாடிப்பட்டி ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவா்கள் கவலை தெரிவித்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடா் கல்லூரி மாணவா் விடுதியில், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக விடுதியில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவா்கள் வெளியிட்ட விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. அதில் உணவு தயாரிப்பதற்கு அழுகிய தக்காளி உள்ளிட்ட காய்கறிகளைப் பயன்படுத்துவதாகவும், உணவு வகைகள் சாப்பிட முடியாத வகையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனா்.
அரசு விதிமுறைகளின்படி மாணவா் விடுதிகளில் மூன்று வேளைகளும் சத்தான, தரமான உணவு வழங்கப்பட வேண்டும். சப்பாத்தி, வெண்பொங்கல், பூரி உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், இந்த விடுதியில் அவை முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், தரமற்ற உணவை வழங்கியபோதும், அரசுப் பதிவுகளில் இந்த விடுதியில் தரமான உணவுகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுதியில் உடனடியாக ஆய்வு செய்து, மாணவா்களுக்கு சுகாதாரமான, தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மாணவா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.