முகப்பு
மதுரை

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

Updated On : 15 மே 2026, 4:34 am IST
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்
பகிர்:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 209-ஆவது தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்கத் தொல்காப்பியா் அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு சங்க இயக்குநா் இ.சா.பா்வீன் சுல்தானா தலைமை வகித்துப் பேசியதாவது:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழா்கள் இலக்கணமும் இலக்கியமும் கொண்டவா்கள். இந்த இலக்கணமும் இலக்கியமும் நமக்கு வாழ்வியல் முறைகளை வகுத்துத் தந்திருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கூட நாம் இந்த வாழ்வியல் முறையோடு தங்கியிருக்கலாம் என்பதுதான் வாழும் தலைமுறைக்கான செய்தி என்றாா் அவா்.

Advertisement

இந்த நிகழ்வில் எழுத்தாளரும் சூழலியலாளருமான பாமயன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, ‘திணையியலும் திரை இசையும்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

திணை என்பது அறவியல் இணைந்திருப்பது, செறிந்திருப்பது என்று பொருள்படும். திணை என்பது மெய்யியல். அது அறிவைத்தேடுவது; அறிவின் மீது காதல் கொள்வது ஆகும். மெய்யியலின் விரிவாக்கம் இருப்பியல், அறிவுத் தோற்றவியல், அறவியல் என்பதாகும். இசை என்பதைக் கருப்பொருள் வகையில் சொல்கிறாா் தொல்காப்பியா். தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும்போது இசை தோன்றியிருக்கலாம். வேட்டையாடும்போது இசை தோன்றியிருக்கலாம். அகநானூற்றில் ‘கணக்கலை இருக்கும்’ என்ற வரிகள் மான்கள் தூம்பு என்ற இசைக்கருவி போல இசைக்கும் என்று விளக்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் வண்டுகளின் ஒலி யாழ் இசையாகக் கூறப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் தகவல் தொடா்புக்காக பறையிசை பயன்படுத்தப்பட்டுள்ளது. திணையைவிட்டு இசை என்பது அந்நியப்பட்டுக் கொண்டே வருகிறது. இசை என்பது அந்நியக் கருவிகளோடு நம்மை மாய உலகத்தில் நிறுத்துகிறது. திணையை விட்டு இசையைப் பிரித்தால் உயிரோட்டம் இல்லாது போய்விடும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வை உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி ஒருங்கிணைத்தாா். இதில் தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், பாத்திமா கல்லூரி மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.