ஒட்டன்சத்திரம் தொகுதி வாகரை ஊராட்சி மன்றத் தலைவர், நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ. 65 ஆயிரம் பணம் கையாடல் செய்ததாக, வட்டார வளர்ச்சி அலுவலர் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி, தொப்பம்பட்டி ஒன்றியத்தில், வாகரை ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கே. சின்னான்.
இவர் கடந்த 1 ஆம் தேதி, பூலாம்பட்டியில் உள்ள கனரா வங்கியிலிருந்து, நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களின் சம்பளப் பணமான 64,908 ரூபாயை எடுத்தாராம்.
மேலும், தொழிலாளர்களுக்கு அந்தப் பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதையறிந்த, வாகரை பொதுமக்கள் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சேகரனிடம் புகார் செய்தனர்.
இது குறித்து, அவர் விசாரணை நடத்தியதில், பணம் கையாடல் செய்தது உண்மை என்று தெரியவந்தது.
இதனால், அவர் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கே. சின்னான், ஊராட்சி எழுத்தர் சேகர் ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சேகர் கூறுகையில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணம் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது. எனவே, அது தொடர்பாக விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பேன்.
அதன் பின்னரே, தலைவர் மற்றும் ஊராட்சி எழுத்தர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.