முகப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டையில் தடம்பதிக்கஅதிமுக, திமுக கடும் போட்டி

விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ள நிலக்கோட்டை தொகுதியில் 1957ஆம் ஆண்டு முதல் 13 பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை அதிமுகவும் (கடந்த தேர்தலில் புதியதமிழகம் கூட்டணி சேர்த்து), 2 முறை திமுகவும் வெற்றி பெற்றன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:

விவசாயத்தை பிரதானமாக கொண்டுள்ள நிலக்கோட்டை தொகுதியில் 1957ஆம் ஆண்டு முதல் 13 பேரவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 4 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை அதிமுகவும் (கடந்த தேர்தலில் புதியதமிழகம் கூட்டணி சேர்த்து), 2 முறை திமுகவும் வெற்றி பெற்றன. இத்தொகுதியில் ஏ.எஸ். பொன்னம்மாள் 6 முறை போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றார் என்பது சிறப்பு.

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள்நலக் கூட்டணி(தேமுதிக), பாஜக, பாமக என பிரதான கட்சிகள் உள்பட நாம்தமிழர், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய சமாஜ் பட்சா ஆகிய கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், ஆர்.தங்கத்துரை (அதிமுக), எம்.அன்பழகன் (திமுக), கே.ராமசாமி (தேமுதிக) ஆகியோரே தொகுதியில் முன்னணி வேட்பாளராக உள்ளனர்.

அதிமுக பலம்,பலவீனம்: அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.தங்கத்துரைக்கு கடந்த மூன்று முறை அதிமுக தொகுதியை தக்கவைத்திருப்பதும், அதனை வைத்தே தொண்டர்கள் பணியாற்றுவதுமே பலமாக உள்ளது. முன்னாள் வேட்பாளர்கள் அனைவரும் சொன்ன வாக்குறுதிகளை செய்யாமல் விட்டதே பலவீனமாக கருதப்படுகிறது.

திமுக பலம்,பலவீனம்: தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. முனியாண்டியின் மகன் அன்பழகன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என்பதே பலமாக உள்ளது. இவருடைய அண்ணன் அறிவழகன் 1991ஆம் ஆண்டு திமுக வேட்பாளராக நின்று பொன்னம்மாளிடம் தோல்வியுற்றார் என்பதும்,கட்சியினரிடையே கருத்து வேறுபாடு, தேர்தல் பணியாற்றுவதில் நிர்வாகிகளிடையே குழப்பம் ஆகியவையே பலவீனமாக உள்ளது.

தேமுதிக: தேமுதிக வேட்பாளர் கே. ராமசாமிக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் களப்பணியாற்றுவதில் உள்ள ஒற்றுமையே வேட்பாளருக்கு பலமாக உள்ளது.

பாஜக: பாஜக வேட்பாளர் ஆர்.அழகுமணி பழையவத்தலகுண்டுவை சேர்ந்தவர். இவர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த இவர் மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்.

இவருக்கு சமுதாய வாக்குகளே பலமாக உள்ளது.

ஆனால், தேர்தல் பணியாற்றுவதில் கட்சியினர் ஒத்துழைப்பு தருவதில்லை என்பதுதான் பலவீனம்.ஆகவே, இத்தொகுதியில் அதிமுக - திமுக நேரடியாக களத்தில் இருந்தாலும் மக்கள் நலக் கூட்டணி, பாஜக, பாமக வினால் வாக்குகள் பிரியும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், தொகுதியில் மீண்டும் தடம்பதிக்க அதிமுகவும், தொகுதியை கைப்பற்ற திமுகவும் முனைப்பில் உள்ளன.

-என். சரவணன்

முழு கட்டுரையைப் படிக்க →