கொடைக்கானலில் தொடர் மழை: வீட்டின் சுவர் இடிந்து சேதம்
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் புதன்கிழமை வீட்டின் சுவர் இடிந்து சேதமடைந்தது.
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் புதன்கிழமை வீட்டின் சுவர் இடிந்து சேதமடைந்தது.
இங்கு விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை லாஸ்காட் சாலையிலுள்ள சகாயம் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மதியம் 2 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. மாலை 6 மணிக்குப் பிறகே மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் கொடைக்கானலில் குளிர் அதிகரித்துள்ளது. இந்நேரத்தில் மின்தடை ஏற்படுவதால் மின் உபயோகப் பொருள்களை பயன்படுத்த முடியாதததால் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து கொடைக்கானல் மின் உதவி பொறியாளர் மேத்யூ கூறியதாவது: கொடைக்கானல் செண்பகனூரிலுள்ள துணை மின் நிலையப் பகுதியில் மின்மாற்றி சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வெளியூர்களிலிருந்து மின் பொறியாளர்கள் வரவேண்டும். இதனால் மதியத்திலிருந்து கொடைக்கானல் முழுவதும் மின் தடை ஏற்பட்டது. தற்போது வத்தலகுண்டு துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறப்பட்டு தாற்காலிகமாக கொடைக்கானல் நகரில் ஒரு சில இடங்களுக்கு மட்டும் மின் விநியோகம் செய்துள்ளோம். விரைவில் துனை மின்நிலையத்திலுள்ள மின்மாற்றி சரி செய்யப்பட்டு அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சார விநியோகிக்கப்படும் என்றார்.