திண்டுக்கல்லில் 2 பெண்கள் கொலை: உறவினர்கள் உள்பட 4 பேர் கைது
திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்து 2 பெண்கள் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர்கள் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் வீட்டுக்குள் புகுந்து 2 பெண்கள் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர்கள் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் பேகம்பூர் யூசுப்பியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (50). இவரது மனைவி கொல்சம் பீவி (45). இவர்களது மகன் ஷேக் பரீத்தின் மனைவி மதினா பேகம், கடந்த சில நாள்களுக்கு முன் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டதையடுத்து, அவரை சாகுல்ஹமீது குடும்பத்தினர் சரியான முறையில் கவனிக்கவில்லை என்று அவரது உறவினர்கள் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே, ஷேக் பரீத்துக்கு மறுமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மதினா பேகத்தின் சகோதரர்கள் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்நிலையில், யூசுப்பியா நகர் வீட்டிலிருந்த சாகுல் ஹமீது, கொல்சம் பீவி, அவரது தங்கை பர்கத் நிஷா (40) ஆகியோரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை தப்பியோடிவிட்டது.
இதில், கொல்சம் பீவி, பர்கத் நிஷா ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இக்கொலை தொடர்பாக, பேகம்பூரைச் சேர்ந்த மதினா பேகத்தின் சகோதரர்கள் இஸ்மாயில், சதாமுசேன் உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.