நத்தம் அருகே ஜல்லிக்கட்டில் காளை முட்டி 14 பேர் காயம்
நத்தம் அடுத்துள்ள அய்யாபட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
நத்தம் அடுத்துள்ள அய்யாபட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள அய்யாபட்டி காளியம்மன், கருப்புசாமி கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஜல்லிகட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திண்டுக்கல் கோட்டாட்சியர் ஜீவா போட்டியை தொடங்கி வைத்தார்.
வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்குபின், ஊர்கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட 313 காளைகள் கால்நடை மருத்துவத்துறை பரிசோதனைக்கு பின் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடிக்கும் முயற்சியில் 250 வீரர்கள் ஈடுபட்டனர்.
காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, கட்டில், நாற்காலி, சைக்கிள், பீரோ, பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காளைகளை பிடிக்க முயன்றபோது மாடுபிடி வீரர்கள் 10 பேர், பார்வையாளர்கள் 4 பேர் என மொத்தம் 14 பேர் காயமடைந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்யாப்பட்டி பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.