கொடைக்கானலில் அடிபட்டுக் கிடந்த சருகுமான்: காப்பாற்றிய வாகன ஓட்டுநருக்கு பாராட்டு
கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சருகு மானை மற்றொரு வாகன ஓட்டுனர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்த சருகு மானை மற்றொரு வாகன ஓட்டுனர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து குறைந்துள்ள நிலையில் அவை சாலையிலும் தெருக்களிலும் நடமாடுகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் மச்சூர் என்ற இடத்தின் அருகே சருகு மான் ஒன்று சாலையின் ஓரம் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வத்தலக்குண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு வாகன ஓட்டுநர் ஜேம்ஸ் என்பவர் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது மலைச்சாலையில் கிடந்த சருகு மானை மீட்டு கொடைக்கானல் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்த அந்த சருகுமானுக்கு வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலமாக சிகிச்சை அளித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்
சருகு மானை மீட்டு கொடைக்கானல் வனத்துறையினரிடம் ஒப்படைத்த வாகன ஓட்டுனரை வனத்துறையினர் பாராட்டினார்.