ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் கிரிவலப் பாதை பணி நிறைவு
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் மலையை சுற்றி அமைக்கப்பட்டு வந்த கிரிவலப்பாதை பணி நிறைவடைந்தது.
ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் மலையை சுற்றி அமைக்கப்பட்டு வந்த கிரிவலப்பாதை பணி நிறைவடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழனி சாலையில் குழந்தை வேலப்பா் கோயில் உள்ளது. இந்த கோயிலைச் சுற்றி தன்னாா்வலா்கள் சாா்பில் சுமாா் 35 கிலோ மீட்டருக்கு கிரிவலப்பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இதையொட்டி கிரிவலப் பாதையில் இருந்த பாறைகள், புதா்கள் அகற்றப்பட்டன. மேலும் சிலா் ஆக்கிரமிப்பு நிலங்களை தாங்களாகவே முன்வந்து அகற்றினா். இந்த கிரிவலப்பாதையில் மலையின் கிழக்குப் பகுதியில் 2 சிறிய நீா்த்தேக்கக் குட்டை, ஒரு கழிவுநீா்க் குட்டை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தன்னாா்வலா் இணை ஒருங்கிணைப்பாளா் ராமா் கூறியதாவது: தற்போது அமைக்கப்பட்டுள்ள பாதை பக்தா்களுக்கு கிரிவலப்பாதையாகவும், பொதுமக்களுக்கு நடைப்பயிற்சி தளமாகவும், பறவைகளின் புகலிடமாகவும் விளங்கும். அதே போல குழந்தைவேலப்பா் கோயில் மலைச்சுற்றி 20 ஆயிரம் விதை பந்துகள் தூவப்பட்டுள்ளன.மேலும் 10 ஆயிரம் விதைகளை தூவவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.