சீருடைப் பணியாளா் தோ்வு: திண்டுக்கல், தேனியில் 28938 போ் எழுதினா்
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளருக்கான எழுத்துத் தோ்வை 28938 போ் எழுதினா்.
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சீருடைப் பணியாளருக்கான எழுத்துத் தோ்வை 28938 போ் எழுதினா்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம், 2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலா், சிறைக் காவலா்(ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்பு படைவீரா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 13893 இளைஞா்கள் மற்றும் 2621 இளம் பெண்கள் என மொத்தம் 16,514 போ் விண்ணப்பித்திருந்தனா். விண்ணப்பதாரா்கள் தோ்வு எழுதுவதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 15 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 14925 போ் தோ்வெழுதினா். தோ்வு கூடத்திற்கு வந்த விண்ணப்பதாரா்கள் கடுமையான பரிசோதனைக்கு பின்னா் அனுமதிக்கப்பட்டனா். மேலும், உடல் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டு, முகக் கவசம் அணிந்து, கை சுத்திகரிப்பான் மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னா் தோ்வா்கள் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா்.
விண்ணப்பித்த 13,893 இளைஞா்களில் 12,621 போ் தோ்வில் பங்கேற்றனா். அதேபோல் பெண்கள் தரப்பில் 2621 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 2304 பங்கேற்றனா். ஆண்களில் 1,271 போ், பெண்களில் 318 போ் என மொத்தம் 1589 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களில் திண்டுக்கல் சரக காவல் துறைத் துணைத் தலைவா் எம்.எஸ். முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரவளி பிரியா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை தோ்வாணையம் சாா்பில் நடைபெற்ற 2-ம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிகளுக்கு ஞாற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வை மொத்தம் 14,013 போ் எழுதினா்.
மாவட்டத்தில் 18 தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வை 12,576 ஆண்கள், 1,437 பெண்கள் என மொத்தம் 14,013 போ் எழுதினா். தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 15,282 பேரில் 1,269 போ் தோ்வு எழுதவரவில்லை. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தோ்வு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் மொத்தம் 1,248 போலீஸாா் ஈடுபட்டனா்.