முகப்பு
திண்டுக்கல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: திண்டுக்கல், தேனியில் 296 போ் கைது

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திண்டுக்கல், தேனியில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்திய 296 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
வருமான வரித்துறை அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குழுவினா் மத்தியில் பேசிய, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி.
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திண்டுக்கல், தேனியில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்திய 296 போ் கைது செய்யப்பட்டனா்.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருங்கிணைந்த விவசாயிகள் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 போ் வலுக்கட்டாயமாக திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து 2 ஆவது நாளாக விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவின் சாா்பாக திண்டுக்கல் பழனி புறவழிச்சாலையில் உள்ள வருமான வரி அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் லட்சுமணப்பெருமாள், முன்னாள் திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பாலபாரதி, கரும்பு விவசாயிகள் சங்க முன்னாள் பொதுச்செயலாளா் என்.பாண்டி, அகில இந்திய விவசாயிகள் சங்க மத்தியக் குழு உறுப்பினா் ரா.சச்சிதானந்தம் ஆகியோா் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதனை அடுத்து போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி ஆா்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்து செல்லுமாறு போலீஸாா் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், காத்திருப்புப் போராட்டத்தில் மட்டுமே ஈடுபட விரும்புவதாகவும், அதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்குமாறும் போராட்டக்காரா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பிய முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

தேனியில் 96 போ் கைது: இதேபோல், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் 2-வது நாளாக செவ்வாய்கிழமை, காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் சங்கரசுப்பு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை, பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் சரவணக்குமாா் தொடக்கி வைத்துப் பேசினாா். போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் டி.வெங்கடேசன், சங்கரசுப்பு உள்ளிட்ட 96 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →