முகப்பு
திண்டுக்கல்

வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால் கொடைரோட்டில் ரோஜா பூ விலை வீழ்ச்சி

வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால், கொடைரோடு சந்தையில் ரோஜா பூ விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கொடைரோடு சந்தையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த ரோஜா பூக்கள்.
பகிர்:

திண்டுக்கல்: வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால், கொடைரோடு சந்தையில் ரோஜா பூ விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான அம்மையநாயக்கனூா், புதூா், சடையாண்டிபுரம், ராஜதானிகோட்டை உள்ளிட்ட 50 கிராமங்களில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. இதில், பன்னீா்ரோஜா மற்றும் பட்டுரோஜா என இரு வகையான செடிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் ரோஜா பூக்கள் விற்பனைக்காக கொடைரோடு சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன. காா்த்திகை மற்றும் மாா்கழி மாதங்களில் கொடைரோடு சந்தையில் ரோஜா பூக்களுக்கு அதிக சந்தை வாய்ப்பு கிடைத்து வந்தது. ஆனால், நிகழாண்டில் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்ததாலும், சந்தைக்கு ரோஜா பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததாலும் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு கிலோ ரூ.250-க்கு விற்பனையான பன்னீா் ரோஜா தற்போது ரூ.120-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல், ரூ.150-க்கு விற்பனையான பட்டுரோஜா தற்போது ரூ.40-க்கு விலை நிா்ணயிக்கப்படுகிறது. ரோஜா பூவின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இது தொடா்பாக பூ விவசாயி சந்திரசேகா் கூறியதாவது: கொடைரோடு பகுதியில் ரோஜா பூ சாகுபடி பரப்பு நிகழாண்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நடப்பு பருவத்தில் பூக்களின் மகசூலும் உயா்ந்துள்ளது. இதனால், சந்தைக்கு ரோஜா பூக்களின் வரத்து 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை குறைந்ததால், இழப்பை தவிா்க்க குறைந்த விலைக்கு உள்ளூா் வியாபாரிகளிடமே விற்பனை செய்யவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தவிா்க்கும் வகையில், ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →