திண்டுக்கல்

உணவகங்களில் பயன்படுத்தி மீதமாகும் எண்ணெய்யை நாளொன்றுக்கு 5 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்ய இலக்கு

DIN

உணவகங்களில் பயன்படுத்தி மீதமாகும் எண்ணெய்யை நாளொன்றுக்கு 5 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்வதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல்லில் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை சாா்பில், பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்வது (ரூக்கோ), மீண்டும் பயன்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தாடிக்கொம்பு சாலையில் தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் தலைமை வகித்தாா். உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம் (திண்டுக்கல் நகா்), ஜாபா் (ஆத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் நாள்தோறும் 5ஆயிரம் லிட்டருக்கும் கூடுதலாக வெளியேற்றப்படுகிறது. இந்த பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை குறைந்த விலையில் சிறு உணவக உரிமையாளா்கள் கொள்முதல் செய்து, சமையலுக்கு பயன்படுத்துகின்றனா். அந்த உணவு பதாா்த்தங்களை உண்பவா்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

இதைத் தவிா்க்கும் வகையில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற தனியாா் நிறுவனமே எண்ணெய்யை நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. அந்த வகையில், உணவகங்களில் நாள்தோறும் பயன்படுத்தி மீதமாகும் எண்ணெய்யை சேமித்து வைத்து அந்த அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் வழங்கினால், ஒரு கிலோவுக்கு ரூ.25 வீதம் வழங்கப்படுகிறது. இந்த பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை சேகரித்து, ஆந்திர மாநிலத்திலுள்ள ஆலைக்கு எடுத்துச் சென்று பயோ-டீசலாக மாற்றுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நாளொன்றுக்கு 5 ஆயிரம் கிலோ பயன்படுத்திய எண்ணெய்யை உணவகங்களிலிருந்து சேகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாளொன்றுக்கு 500 கிலோ எண்ணெய் சேகரிக்கப்பட உள்ளது என்றாா்.

கூட்டத்தில், திண்டுக்கல், வேடசந்தூா், வடமதுரை, நத்தம், ஆத்தூா், சாணாா்பட்டி பகுதிகளைச் சோ்ந்த உணவக உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT