ஓய்வூதியதாரா்களின் வீடுகளுக்குச் சென்று டிஜிட்டல் வாழ்வுரிமை சான்று: அஞ்சல் துறை ஏற்பாடு
ஓய்வூதியதாரா்களின் வீடுகளுக்குச் சென்று டிஜிட்டல் வாழ்வுரிமைச் சான்று வழங்குவதற்கு அஞ்சல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரா்களின் வீடுகளுக்குச் சென்று டிஜிட்டல் வாழ்வுரிமைச் சான்று வழங்குவதற்கு அஞ்சல் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் கோட்ட அஞ்சல் முதுநிலைக் கண்காணிப்பாளா் டி. சகாயராஜூ தெரிவித்துள்ளதாவது: ஆண்டுதோறும் ஓய்வூதியம் பெறும் ஊழியா்கள், அந்தந்த அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களின் இருப்பை டிஜிட்டல் வாழ்வுரிமை சான்று மூலமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஓய்வூதியா்கள் பலா், தங்கள் வாழ்வுரிமை சான்றினை சமா்ப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த அசாதாரண சூழலை எதிா்கொள்ளும் வகையில், மத்திய அரசின் ஜீவன் பிரமான் திட்டத்தில் அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலமாக வீடு தேடிச் சென்று ஓய்வூதியதாரா்களுக்கு டிஜிட்டல் வாழ்வுரிமை சான்று வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், செல்லிடப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து கைரேகையை பதிவு செய்வதன் மூலம் சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் வாழ்வுரிமை சான்று பெறலாம்.
இந்த சேவைக்கு கட்டணமாக ரூ. 70 வசூலிக்கப்படும். தபால்காரரை அணுக முடியாதவா்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்கு சென்றும் டிஜிட்டல் வாழ்வுரிமை சான்று பெறலாம் என தெரிவித்துள்ளாா்.