முகப்பு
சென்னை

கடற்படையில் இணைந்தது 'ஐஎன்எஸ் அஞ்சதீப்' போர்க் கப்பல்

எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்ட ஐஎன்எஸ் 'அஞ்சதீப்' போர்க் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:58 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:58 AM

எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்ட ஐஎன்எஸ் 'அஞ்சதீப்' போர்க் கப்பல் இந்திய கடற்படையில் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டது.

நீர் மூழ்கி போர்க் கப்பல் எதிர்ப்பு திட்டத்தின் கீழ், நீர்மூழ்கி கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கும் 8 போர்க் கப்பல்களைக் கடற்படையில் இணைக்க ராணுவ அமைச்சகம் முடிவு செய்தது.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:58 AM

அதன்படி, ஏற்கெனவே 2 போர்க் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், 3-ஆவது ஐஎன்எஸ் 'அஞ்சதீப்' என்ற போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

நிகழ்ச்சியில், இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி கலந்துகொண்டு போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அன்ட் என்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட இந்தப் போர் கப்பல், நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு பெறும்.

கடலோர மற்றும் ஆழமற்ற கடல் சூழல்களில் இந்தக் கப்பலை இயக்க முடியும். இதன்மூலம் எதிரிகளைத் துல்லியமாக எதிர்கொள்ளலாம். உறுதிப்பாடு, வீரம், துணிச்சலான நடவடிக்கை, தேசிய கடல்சார் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவையே இந்த 'அஞ்சதீப்' போர்க் கப்பலின் கொள்கையாகும்.

ஆண்டுதோறும் இந்திய கடற்பகுதியை பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் கடந்து செல்கின்றன. இதனால், நமது கடற்பரப்பின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. நம்மை சுற்றி தீவிரமடைந்துவரும் கடல்சார் போட்டிகளையும், ஊடுருவல்களையும் தடுக்க இது உதவும்.

கடற்பரப்பில் ஏற்படும் சிறிய இடையூறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதனால் நமது கடல் எல்லைகளின் பாதுகாப்பு வேகத்தை அதிகரிப்பதுடன், தெளிவான அணுகுமுறையுடன் கூடிய கடற்படையை வடிவமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 2025-இல் இந்திய கடற்படை 12 போர்க் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல் இணைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, 2026-இல் சுமார் 15 போர்க் கப்பல்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். இது நமது வரலாற்றிலேயே மிக உயர்ந்த மற்றும் முன்னெப்போதும் இல்லாத ஒரு மைல்கல்லாகும் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில், துணை அட்மிரல் சஞ்சய் பல்லா, துணை அட்மிரல் சஞ்சய் சாது, அஞ்சதீப் கப்பலின் கட்டளை அதிகாரி கிருஷ்ண குமார் வர்மா உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 3:58 AM

சிறப்பம்சங்கள்

* உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 77 மீட்டர் நீளமுள்ள இந்த அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்.

* 'வாட்டர்ஜெட்' உந்துவிசை வாயிலாக, மணிக்கு 25 கடல் மைல் வேகத்தில் செல்லும்.

* நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள், இலகுரக ஏவுகணைகள் மற்றும் டார்பிடோக்கள் ஆகிய ஆயுதங்களை இக்கப்பலில் இருந்து இயக்க முடியும்.

*கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் எதிரி கப்பல்களைக் கண்டறிய உதவும் அதிநவீன 'சோனார்' என்ற ஆழ்கடல் உணர்கருவி இந்தக் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது.

*கடலோர ரோந்து மற்றும் பாதுகாப்பு, மீட்புப் பணிகளுக்கென இந்தக் கப்பல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.