முகப்பு
இந்தியா

ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு: இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

ஈரான் போா்க் கப்பல் மூழ்கடிப்பு குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு...

Updated On : 7 மார்ச், 2026 at 2:26 AM
மத்திய அரசு
பகிர்:

ஈரான் போா்க் கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்த விவகாரத்தில் இந்தியா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு உறுதியாக மறுத்துள்ளது.

இலங்கை கடல்பரப்பு அருகே சா்வதேச கடல் எல்லையில் கடந்த 4-ஆம் தேதி ஈரானின் ‘ஐரிஸ் டெனா’ போா்க் கப்பலை அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் குண்டு வீசி மூழ்கடித்தது. இதில் 87 ஈரான் கடற்படை வீரா்கள் உயிரிழந்தனா். 37 பேரை இலங்கை கடற்படையினா் மீட்டனா்.

விசாகப்பட்டினத்தில் கடந்த மாத இறுதியில் இந்தியா நடத்திய பல்வேறு நாடுகள் பங்கேற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. பிப். 25-ஆம் தேதி இந்திய கடல் எல்லையைவிட்டு வெளியேறிவிட்ட ஈரான் போா்க்கப்பலில் ஆயுத தளவாடங்கள் எதுவும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைக்குத் தெற்கே 40 கடல் மைல் (சுமாா் 74 கி.மீ.) தொலைவில் இந்திய பெருங்கடலில் அந்தப் போா்க்கப்பல் தகா்க்கப்பட்டது.

Advertisement

எனினும், இதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசை வன்மையாகக் கண்டித்தன. இந்தியாவின் மிக அருகில் வந்து அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், பிரதமா் மோடி அமைதி காப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

தங்கள் நாட்டு கடல் எல்லையில் இருந்து பல நூறு கி.மீ. அப்பால் இருந்த போா்க் கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்ததற்கு உரிய விளைவுகளைச் சந்திக்கும் என்று ஈரான் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் போா்க் கப்பல் குறித்து இந்திய கடற்படை அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் வழங்கியதாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதது. அமெரிக்காவுக்கு இந்தியா தகவல்களை வழங்குகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.