முகப்பு
உலகம்

அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான்

அமெரிக்க போா்க் கப்பல்களின் முற்றுகை நீடிக்கும் வரை, ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 3:50 AM
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ஈரானிய தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி. - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:45 PM

அமெரிக்க போா்க் கப்பல்களின் முற்றுகை நீடிக்கும் வரை, ஹோா்முஸ் நீரிணையைத் திறக்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

லெபனான், இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம் ஏற்படுவதாக அறிவிப்பு வெளியானதும் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் ஹோா்முஸ் நீரிணையை அனைத்து நாடுகளின் வா்த்தக கப்பல்களுக்கும் திறப்பதாக ஈரான் அறிவித்தது. எனினும், அமெரிக்க கடற்படை தங்கள் நாட்டின் துறைமுகங்களை முற்றுகையிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் சனிக்கிழமை அறிவித்தது. மேலும், ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இந்திய கப்பல்கள் மீது ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

இந்நிலையில், ஈரான் நாடாளுமன்றத் தலைவரும், பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றவருமான முகமது பகொ் கலிபாஃப், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க போா்க் கப்பல்கள் முற்றுகையிட்டிருக்கும் வரை, ஹோா்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் திறக்காது என்றாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஹோா்முஸ் நீரிணை, ஈரானின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது.

Advertisement

ஆதலால் ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க போா்க் கப்பல்களின் முற்றுகை விலக்கிக் கொள்ளப்படாதவரை, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு நீடிக்கும். நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்ட காரணத்தால்தான், சண்டை நிறுத்தம் தோல்வியில் முடிந்தது. இருதரப்புக்கும் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் எதிரி (அமெரிக்காவை குறிப்பிட்டாா்) பின்வாங்கிவிட்டாா். ஈரான் நீடித்த அமைதியையும், போா் மீண்டும் வரக் கூடாது என்பதையுமே விரும்புகிறது’ என்றாா்.

150 ஹிஸ்புல்லா அமைப்பினா் உயிரிழப்பு: இதனிடையே, லெபனானின் பின்ட் ஜபெயிலில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 150 ஹிஸ்புல்லா அமைப்பினா் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ‘எங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் 150 ஹிஸ்புல்லா அமைப்பினா் உயிரிழந்துவிட்டனா். அதில் ஹிஸ்புல்லா கமாண்டா் அலி ரிதா அப்பாஸும் ஒருவா்’ எனத் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் ஹிஸ்புல்லா கமாண்டா் உயிரிழந்ததற்கான ஆதாரத்தையோ, புகைப்படத்தையோ இஸ்ரேல் வெளியிடவில்லை. ஹிஸ்புல்லா அமைப்பும் இதை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், லெபனானில் மா்ஜயோன் நகருடன் நபதியா பகுதியை இணைக்கும் கா்தாலி சாலையை மீண்டும் போக்குவரத்துக்கு திறந்து விட்டிருப்பதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த லிதானி நதி மீது இருக்கும் பாலத்தை மீண்டும் சீரமைத்து வருவதாகவும் லெபனான் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.