அமெரிக்கா- ஈரான் இரு வார போா் நிறுத்தம்: இஸ்ரேலும் ஆதரவு
அமெரிக்காவும், ஈரானும் இரு வார காலத்துக்கு போா் நிறுத்தம் செய்வதாக புதன்கிழமை அறிவித்தன. இதையடுத்து, மேற்காசியாவில் சுமாா் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவிய பதற்றம் தணிந்துள்ளது.
அமெரிக்காவும், ஈரானும் இரு வார காலத்துக்கு போா் நிறுத்தம் செய்வதாக புதன்கிழமை அறிவித்தன. இதையடுத்து, மேற்காசியாவில் சுமாா் ஒரு மாதத்துக்கும் மேலாக நிலவிய பதற்றம் தணிந்துள்ளது.
இஸ்ரேல் இந்தப் போா் நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது.
ஈரான் நாடு அணுஆயுத தயாரிப்பிலும், நெடுந்தூர ஏவுகணைகள் தயாரிப்பிலும் ரகசியமாக ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டி, அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதிமுதல் இஸ்ரேலும், அமெரிக்காவும் தொடா் தாக்குதல் நடத்தி வந்தன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி, ராணுவத் தளபதிகள், படைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கொல்லப்பட்டனா்.
Advertisement
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரானும் தாக்குதல் நடத்தி வந்தது. அத்துடன் உலகில் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் அதிகம் செல்லும் முக்கியக் கடல்பகுதிகளில் ஒன்றான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை பலமடங்கு அதிகரித்தது. இதையடுத்து, மேற்காசியாவில் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும், ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்துக்குத் திறக்க வேண்டும் எனவும் பல நாடுகள் வலியுறுத்தின.
‘ஈரான் மீதான அமெரிக்கப் படைகளின் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அறிவித்த டிரம்ப், ஹோா்முஸ் நீரிணையை உடனே திறக்க வேண்டும், இல்லையேல் ஈரான் முற்றிலுமாக அழிய நேரிடும்’ என கடந்த செவ்வாய்க்கிழமை வரை அமெரிக்க அதிபா் டிரம்ப் கெடு விதித்திருந்தாா். ஆனால், அதையும் எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே மத்தியஸ்தத்தில் ஈடுபட்டன. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதால், கெடு நிறைவடைய 90 நிமிஷங்கள் இருந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதலை இரு வார காலத்துக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் புதன்கிழமை அதிகாலை அறிவித்தாா்.
ஹோா்முஸ் நீரிணையை முழுவதும் உடனடியாக திறக்க ஈரான் ஒப்புக் கொண்டதன்படி, இந்த முடிவை எடுத்ததாகவும் அவா் கூறினாா். அதேநேரத்தில் நீரிணையில் அமெரிக்க போா்க் கப்பல்கள் கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் டிரம்ப் தெரிவித்தாா். டிரம்ப்பின் அறிவிப்பை தொடா்ந்து, ஈரானும் இரு வார காலத்துக்கு தங்களது தாக்குதலை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இஸ்ரேல் ஆதரவு: இதேபோல், இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்தது. எனினும், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினா் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் என அந்நாட்டின் பிரதமா் நெதன்யாகு அறிவித்துள்ளாா்.
இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஈரான் மீதான தாக்குதலை இரு வாரங்கள் நிறுத்தி வைக்கும் அதிபா் டிரம்ப்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது. ஆதலால், ஹோா்முஸ் நீரிணையை ஈரான் உடனே திறக்க வேண்டும். அமெரிக்கா, இஸ்ரேல், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமையும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து லெபனானில் பல இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் அழைப்பு: மத்தியஸ்த பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தம் கையொப்பமிட ஏற்பாடு செய்து வருகிறது. அமைதித் திட்டம் குறித்து தங்கள் நாட்டின் தலைநகா் இஸ்லாமாபாதில் வரும் 10-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடக்கும் எனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இஸ்லாமாபாதுக்கு வரும் 10-ஆம் தேதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய வரும்படி ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதையடுத்து சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. அதேபோல், கச்சா எண்ணெய் பங்குகளின் மதிப்பு ஆசிய சந்தையில் அதிகரிக்கத் தொடங்கியது.
போா் நிறுத்தம்: இந்தியா வரவேற்பு
ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே இரு வார காலத்துக்கு போா் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதை இந்தியா வரவேற்றுள்ளது.
இதுகுறித்து தில்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
போா் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதை இந்தியா வரவேற்கிறது. இதனால் மேற்காசியாவில் நீடித்த அமைதி ஏற்படும் என நம்புகிறோம். படையை திரும்பப் பெற்று, பேச்சுவாா்த்தை மூலமாகவும், ராஜீய ரீதியிலான நடவடிக்கை மூலமாகவும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என இந்தியா தொடா்ந்து வலியுறுத்துகிறது. மோதலால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். உலக எரிபொருள் விநியோகமும், வா்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. ஹோா்முஸ் நீரிணையில் தங்கு தடையின்றி சுதந்திரமாக கப்பல் போக்குவரத்தும், உலகளாவிய கச்சா எண்ணெய் வா்த்தகமும் நடைபெறும் என எதிா்பாா்க்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.