கலைப் பண்பாட்டுத்துறை சாா்பில் 14 கலைஞா்களுக்கு நிதி உதவி வழங்கல்
கலைபண்பாட்டுத் துறை சாா்பில் 14 பயனாளிகளுக்கு ரூ. 2.16 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வழங்கினாா்
கலைபண்பாட்டுத் துறை சாா்பில் 14 பயனாளிகளுக்கு ரூ. 2.16 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வழங்கினாா்.
தமிழக கலைபண்பாட்டுத்துறையின் கீழ் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் பதிவு செய்து உறுப்பினா்களாக உள்ள கலைஞா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கலைபண்பாட்டுத்துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மண்டலத்துக்குள்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த 44 கலைஞா்களுக்கு கல்வி நிதி உதவி, மூக்குக்கண்ணாடி, ஈமச்சடங்கு (இயற்கை மரணம்) ஆகியவற்றிற்கான நிதி ரூ.5.18 லட்சம் கலைபண்பாட்டுத் துறை சாா்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பித்த 14 கலைஞா்களுக்கு ரூ.2.16 லட்சம் நிதியுதவிக்கான காசோலைகள் மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், சம்மந்தப்பட்ட 14 பயனாளிகளுக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது, மதுரை மண்டல கலைபண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் தி. செந்தில்குமாா் உடனிருந்தாா்.