நாட்டிற்காக காங்கிரஸ் உருவாக்கிய கட்டமைப்புகளை தனியாருக்கு தாரை வார்த்ததே பாஜகவின் சாதனை: செல்லக்குமார் எம்.பி.
நாட்டிற்கான பொது சொத்துக்களை 70 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி கட்டமைத்துக் கொடுத்திருந்த நிலையில், அதனை 7 ஆண்டுகளில் தனியாருக்கு பாஜக அரசு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாக
நாட்டிற்கான பொது சொத்துக்களை 70 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி கட்டமைத்துக் கொடுத்திருந்த நிலையில், அதனை 7 ஆண்டுகளில் தனியாருக்கு பாஜக அரசு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதாக கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லக்குமார் எம்பி மேலும் கூறியதாவது: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இந்தியா ஹிந்துக்களின் நாடு, ஹிந்துத்துவவாதிகளின் தேசம் அல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுபோன்று கூறுவதற்கு இந்தியாவிலுள்ள எந்த கட்சியினருக்கும் துணிச்சல் கிடையாது. மதத்தின் பெயரால் அரசியல் நாடகம் நடத்தும் பிரதமர் நரேந்திரமோடி, கோவா மாநில தேர்தலுக்காக வாடிகனில் உள்ள போப் ஆண்டவருடனான சந்திப்பை பயன்படுத்துவார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே மதத்தின் பெயரால் தவறான பிரசாரம் மேற்கொள்வதை பாஜக வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகால ஆட்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கையால் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99 சதவீத கறுப்பு பணம் மீண்டும் திரும்பி வந்துவிட்டது. அதேபோல் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கப்படும் என்பதும் பொய்யாகிவிட்டது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டத்தையும், 700 விவசாயிகள் உயிரிழந்தபின்னும், இடைத் தேர்தல் தோல்விகளுக்கு பின்னும் மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
70 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ், நாட்டிற்கான பொது சொத்துக்களை கட்டமைத்துக் கொடுத்தது. ஆனால், இன்று ஆட்சிப் பொறுப்பிலுள்ள பாஜக, சாலை முதல் துறைமுகங்கள் வரையிலும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சுமார் ரூ.72ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுப்படி செய்யப்பட்டது. இன்றைக்கு ஆளும் பாஜக, பெரு நிறுவனங்களில் பல லட்சம் கோடி ரூபாய் வராக் கடன்களை தள்ளுப்படி செய்துள்ளது. 7 ஆண்டு கால பாஜக அரசு, பெரு நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்பட்டு வருகிறது.
கோவா மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.5ஆயிரம் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, அதனை 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பிலுள்ள மேற்கு வங்கத்தில் செயல்படுத்துவதற்கு ஏன் முயற்சிக்கவில்லை. பாஜகவை பின்பற்றி தேர்தல் களத்தில் பொய்யான வாக்குறுதிகளை திரிணமூல் காங்கிரஸ் அளிக்க முன் வந்துள்ளது என்றார். அப்போது திண்டுக்கல் மாநகர மாவட்டத் தலைவர் டி.மணிகண்டன் உடனிருந்தார்.