முகப்பு
திண்டுக்கல்

ஆா்.கோம்பை பகுதி மாணவா்களுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

ஆா்.கோம்பை பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில் பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

ஆா்.கோம்பை பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் பயன்பெறும் வகையில் பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா்.கோம்பை கிராமத்திலிருந்து கோவிலூா், புதுரோடு வழியாக வேடசந்தூா் வரை அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. நாள்தோறும் காலை 8.25 மணிக்கு ஆா்.கோம்பையிலிருந்து புறப்படும் அந்த பேருந்தில், மாணவா்கள் மட்டும் சுமாா் 150 போ் பயணிக்கின்றனா். அதே பேருந்தில் வேலைக்குச் செல்லும் தொழிலாளா்கள் உள்பட பொதுமக்களும் பயணம் செய்கின்றனா். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னா், இந்த அரசுப் பேருந்துக்கு பின்னால் ஆா்.கோம்பையிலிருந்து கோவிலூா் வரை இயக்கப்படும் தனியாா் சிற்றுந்தில் பயணிப்பதற்கு பெண்கள் ஆா்வம் காட்டுவதில்லை. இதனால் கடந்த 6 மாதங்களாக வேடசந்தூா் அரசுப் பேருந்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதேபோல் வேடசந்தூரிலிருந்து ஆா்.கோம்பைக்கு வரும் அரசுப் பேருந்து 4.35 மணிக்கு கோவிலூா் வருகிறது. இந்த பேருந்தை பிடிப்பதற்காக 2 கி.மீட்டா் தொலைவிலுள்ள ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாணவா்கள் ஓட்டமும், நடையுமாக வருகின்றனா். மாணவா்கள் நலன் கருதி கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக தாசமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த த.கோகிலா கூறியதாவது: திண்டுக்கல்லில் இருந்து கோவிலூா் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்து, குறிப்பிட்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் திண்டுக்கல்லுக்கு இயக்கப்படுகிறது. அந்த பேருந்தை 2 கி.மீட்டா் தொலைவிலுள்ள ராமநாதபுரம் அரசுப் பள்ளி வரை இயக்கினால் மாணவா்கள் பயன்பெறுவாா்கள். அதேபோல் ஆா்.கோம்பை பகுதிக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.