முகப்பு
திண்டுக்கல்

திருமங்கலம் ஓமியோபதி கல்லூரி மாணவா்களை திண்டுக்கல்லுக்கு இடமாற்றம் செய்வது குறித்து ஆய்வு

தற்காலிகமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கல்வி பயில்வதற்கான இடவசதிகள் குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருந்துத்துறை ஆணையா் கணேசன் சனிக்கிழமை ஆய்வு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

மதுரை ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்கள், தற்காலிகமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கல்வி பயில்வதற்கான இடவசதிகள் குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருந்துத்துறை ஆணையா் கணேசன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரி தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதாகவும், மழைக் காலங்களில் கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீா் தேங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, தற்போது பயின்று வரும் மாணவா்கள், விருதுநகா், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் தற்காலிகமாக கல்வி பயில்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான இட வசதிகள் குறித்து ஆணையா் கணேசன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சித்தா, ஓமியோபதி, யுனானி, ஆயுா்வேதம் மற்றும் யோகா பிரிவுகளையும் அவா் பாா்வையிட்டாா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மருத்துவக் கல்லூரி முதன்மையா்(பொ) வீரமணி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலா் ரபீக் அகமது ஆகியோா் உடனிருந்தனா்.

திண்டுக்கல், விருதுநகா், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளையும் ஆய்வு செய்த பின், இடம் மாற்றம் குறித்து அரசுத் தரப்பில் முடிவு செய்யப்படும் என மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.