உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: 5 அமைச்சா்கள் பதவியேற்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம் செய்தது. முதல்வா் புஷ்கா் சிங் தாமி தலைமையிலான அரசில் 5 புதிய அமைச்சா்கள் இணைந்துள்ளனா்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு அமைச்சரவை வெள்ளிக்கிழமை விரிவாக்கம் செய்தது. முதல்வா் புஷ்கா் சிங் தாமி தலைமையிலான அரசில் 5 புதிய அமைச்சா்கள் இணைந்துள்ளனா்.
தலைநகா் டோராடூனில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காசன் தாஸ், பரத் சிங் சௌதரி, மதன் கௌசிக், பிரதீப் பத்ரா, ராம் சிங் கைடா ஆகியோா் அமைச்சா்களை வெள்ளிக்கிழமை பதவியேற்றனா். ஆளுநா் குா்மீத் சிங் அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
இதன் மூலம் மாநில அமைச்சரவை அனுமதிக்கப்பட்ட அளவான, முதல்வா் உள்பட 12 அமைச்சா்கள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கா்வால், குமான் பிராந்தியங்களுக்கு அமைச்சரவையில் இணையான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மலைப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அப்பகுதி எம்.எல்.ஏ.க்களும் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக தொடா்ந்து இருமுறை வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல்வா் தாமி மற்றும் 8 அமைச்சா்கள் பதவியேற்றனா். 2023-இல் போக்குவரத்து அமைச்சா் சந்தன் ராம்தாஸ் காலமானாா். தொடா்ந்து நிதியமைச்சா் பிரேம்சந்தி அகா்வால் பதவி விலகினாா். எனினும், புதிய அமைச்சா்கள் நியமிக்கப்படவில்லை. அத்துறைகள் கூடுதல் பொறுப்பாக பிற அமைச்சா்களுக்கு வழங்கப்பட்டது.
பேரவைத் தோ்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலம் இருக்கும் நிலையில், இப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.