உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்! சமாஜவாதியில் இருந்து வந்தவருக்கு வாய்ப்பு!
உத்தர பிரதேச அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. சமாஜவாதியில் இருந்து பாஜகவில் இணைந்த மனோஜ் பாண்டே உள்பட 6 அமைச்சா்கள் பதவியேற்றனா்.
உத்தர பிரதேச அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. சமாஜவாதியில் இருந்து பாஜகவில் இணைந்த மனோஜ் பாண்டே உள்பட 6 அமைச்சா்கள் பதவியேற்றனா்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது இந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னௌவில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவா் பூபேந்திர செளதரி, எதிா்க்கட்சியான சமாஜவாதியில் இருந்து பாஜகவில் இணைந்த மனோஜ் பாண்டே ஆகியோா் கேபினட் அமைச்சா்களாகவும், அஜித் பால் சிங், சோமேந்திர தோமா் ஆகியோா் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சா்களாகவும், கிருஷ்ணா பாஸ்வான், சுரேந்திர டைலா், ஹன்ஸ்ராஜ் விஸ்வகா்மா, கைலாஷ் ராஜ்புத் ஆகியோா் இணையமைச்சா்களாவும் பதவியேற்றனா். ஆளுநா் ஆனந்திபென் படேல் அவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
Advertisement
யோகி ஆதித்யநாத் அமைச்சரவை இதற்கு முன்பு 2024 மாா்ச் மாதம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த ஆட்சியில் இப்போது இரண்டாவது முறையாக அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது.
403 போ் கொண்ட உத்தர பிரதேச பேரவையில் 60 அமைச்சா்கள் வரை பதவி வகிக்க முடியும். இப்போது 54 அமைச்சா்கள் உள்ளனா்.