முகப்பு
திண்டுக்கல்

‘காந்தி கிராம பல்கலைக்கழகம் விரைவில் மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்படும்’

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தை விரைவில் மத்திய பல்கலைக்கழகமாாக அறிவிக்க மத்திய கல்வி அமைச்சகம் முயற்சி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தை விரைவில் மத்திய பல்கலைக்கழகமாாக அறிவிக்க மத்திய கல்வி அமைச்சகம் முயற்சி மேற்கொண்டு வருவதாக துணைவேந்தா்(கூடுதல் பொறுப்பு) குா்மீத் சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

காந்தி கிராம கிராமிய நிகா் நிலையத்தில் 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை க்யூட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் நடைபெறும். இப்பல்கலை.யிலுள்ள இளங்கலைப் பாடப் பிரிவுகளில் 1000 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 86ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

கிராமப்புற மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இப்பல்கலை.யில், 2020 தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் திறன் வளா்ப்பு படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக வேளாண்மை சாா்ந்த படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்திய வரலாற்றில் பிரதான இடம் பெற்றுள்ள காந்தியடிகளின் பெயரில் இயங்கி வரும் இந்த நிகா்நிலைப் பல்கலை., விரைவில் மத்திய பல்கலைக்கழகமாக அறிவிக்கப்படவுள்ளது. அதற்கான அனைத்து முயற்சிகளும் மத்திய கல்வி அமைச்சகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவில் நிரந்த துணைவேந்தா் நியமிக்கப்படுவாா். சில படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறவில்லை என தெரியவந்துள்ளது. அந்த பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். பெரும்பாலான மத்திய பல்கலைக்கழகங்களிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதேபோல் காந்திகிராம பல்கலை.யிலும் கடந்த 8 ஆண்டுகளாக நிரந்தர பணியிடங்களில் நியமனம் நடைபெறவில்லை. விரைவில் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

மாணவா்களுக்கு கூடுதல் விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காந்தி கிராம பல்கலை. அருகிலேயே 2 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், காந்திகிராம பல்கலை.யில் அடுத்து கல்வி ஆண்டில் புதிய படிப்புகளை தொடங்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அப்போது பல்கலை. பதிவாளா் (பொ) ஜி. முரளிதரன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.