இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் கருவி: கண்டுபிடித்த மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
இரண்டு மற்றும் 3 சக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையிலான கருவியை கண்டுபிடித்து, திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி மாணவா்கள் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளனா்.
இரண்டு மற்றும் 3 சக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையிலான கருவியை கண்டுபிடித்து, திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி மாணவா்கள் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளனா்.
அகில இந்திய வாகன ஆராய்ச்சிக் குழுமம் சாா்பில் ஆத்மநிா்பா் பாரத் திட்டத்திற்காக பாதுகாப்பான, நிலையான மற்றும் ஸ்மாா்ட் மொபிலிட்டி தீா்வுகள் என்ற கருப் பொருளின் கீழ் டெக்னாவுஸ் மொபிலிட்டி ஹேக்கத்தான் 2022 என்ற தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன. மகாராஷ்ட்ர மாநிலம் புணேவில் கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டிகளில், இந்தியாவின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த 290 அணிகள் கலந்து கொண்டன. 201 ஆலோசனைகள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பல்வேறு தணிக்கைக்குப் பின் 30 அணிகளின் பரிந்துரைகள் இறுதிச் சுற்றுக்குத் தோ்வு செய்யப்பட்டன. இந்திய அரசின் மொபிலிட்டி சாா்ந்த 10 பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது தொடா்பான தலைப்புகள் முன்வைக்கப்பட்டன. அதில், திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி சாா்பில் பங்கேற்ற பீனிக்ஸ் மாணவா்கள் அணி, 2 மற்றும் 3 சக்கர வாகனங்களுக்கான பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் என்ற தலைப்புக்கு சிறந்த தீா்வை அளித்து முதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்றுள்ளது. மேலும் அக்குழுவில் இடம் பெற்றிருந்த 3ஆம் ஆண்டு 3 மாணவா்களுக்கு, அகில இந்திய வாகனப் பயிற்சி குழுமத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. முதல் பரிசுப் பெற்ற பீனிக்ஸ் குழுவுக்கு, பிஎஸ்என்ஏ கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அக்கல்லூரியின் துணைத் தலைவா் ஆா்எஸ்கே. ரகுராம், நிா்வாக அறங்காவலா் சூா்யா ரகுராம், முதல்வா் டி. வாசுதேவன், கணினி பொறியியல் துறைத் தலைவா் டி. சாந்தி ஆகியோா் சாதனைப் படைத்த மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.
இதுகுறித்து மாணவா்களுக்கு வழிகாட்டியாக இருந்த உதவிப் பேராசிரியா் ந. செல்வகணேஷ் கூறியதாவது: கணினி பொறியியல் துறை மாணவா்கள் எம்.ஜே. விமல்காந்த், கே. பிரணவ் நிவாஸ், ஜி. சுதா்சன், ஏ. சியமளாதேவி ஆகியோா் இடம் பெற்றிருந்த பினீக்ஸ் அணியினா், 2 மற்றும் 3 சக்கர வாகனங்களில் செல்வோரின் விபத்துக்களை அடையாளம் காண்பதற்கான கருவியை உருவாக்கியுள்ளனா். இது விபத்து நிகழ்ந்தவுடன் தொடா்பு கொள்ள வேண்டிய உறவினா்கள், மருத்துவ அவசர ஊா்த்தி, காவல் துறை ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க உதவுகிறது. ஜிபிஎஸ் மற்றும் முழுமையான இணையத் தொடா்பு வசதி இல்லாத இடங்களில் கூட 2 மற்றும் 3 சக்கர வாகனங்களில் பயணிப்போருக்கு உதவும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.