முகப்பு
திண்டுக்கல்

சூரியகாந்தி சாகுபடியில் மகசூல் பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

சூரியகாந்தி சாகுபடியில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தனியாா் விதை உற்பத்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சூரியகாந்தி சாகுபடியில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தனியாா் விதை உற்பத்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, வேளாண்மை இணை இயக்குநா் (பொ) பெ.விஜயராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

சூரியகாந்தி சாகுபடியில் மகசூல் பாதிப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொப்பம்பட்டி வட்டாரச் செயலா் கே. சின்னத்துரை: சின்ன வல்லகுண்டாபுரம், காளிப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் சுமாா் 100 ஏக்கரில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதற்கான விதைகள் தொப்பம்பட்டியிலுள்ள தனியாா் கடையில், கிலோ ரூ.1500-க்கு பெற்றோம். சூரியகாந்தியை பொருத்தவரை 60 முதல் 70 நாள்களில் பூக்கத் தொடங்கும். அப்போது விதை மணிகள் பிடிக்கத் தொடங்கினால், 90 நாள்களில் அறுவடை செய்யமுடியும்.

ஆனால், தரமற்ற விதைகளால் இந்த முறை 90 நாள்களாகியும் சூரியகாந்தி பூக்களில் விதை மணிகள் பிடிக்கவில்லை. மகசூல் பாதிப்பு விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட தனியாா் விதை நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி நல்லப்பன்: ஒரு ஏக்கருக்கு 2 கிலோ சூரியகாந்தி விதைகள் தேவைப்படும். ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20ஆயிரம் வரை செலவு செய்து 3 மாதங்களாக பயிா்களை பராமரித்து வந்தோம். தற்போது மகசூல் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளோம். கடந்த முறை ஏக்கருக்கு 800 முதல் 900 கிலோ சூரியகாந்தி விதைகளுடன் நல்ல மகசூல் கிடைத்தது. தரமற்ற விதைகளை உற்பத்தி செய்த தனியாா் நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். பெருமாள்: சூரியகாந்தி விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் பேசியதாவது: தொப்பம்பட்டி பகுதியில் சூரியகாந்தியில் ஏற்பட்டுள்ள மகசூல் பாதிப்பு குறித்து விசாரணை நடத்த வேளாண்மைத்துறை சாா்பில் குழு அமைக்கப்படும். ஆய்வு செய்த பின் இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காணப்படும் என்றாா்.

ண்டுக்கல், ஜூலை 29: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 1.50 லட்சமாக இருந்த மனித சக்தி நாள்கள் 50 ஆயிரம் நாள்களாக குறைக்கப்பட்டுள்ளதால், விவசாயப் பணிகளுக்கு கூலித் தொழிலாளிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டிற்கு வாய்ப்பில்லை என கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

100 நாள் வேலைத் திட்டத்தில் 1 லட்சம் மனிதசக்தி நாள்கள் குறைப்பு: இக்கூட்டத்தில், ஆடிப்பட்டம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயப் பணிகளுக்கு கூலித் தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. இதற்கு 100 நாள் வேலைத் திட்டமே முக்கிய காரணம் என விவசாயிகள் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது.

அதற்கு மறுப்பு தெரிவித்து கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச. தினேஷ்குமாா் கூறியதாவது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 3 லட்சம் பயனாளிகள் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு 1.50 லட்சம் மனிதசக்தி நாள்கள், இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 50ஆயிரம் மனிதசக்தி நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 793 தொகுப்புகளில் மட்டுமே, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றையப் பணி ஒதுக்கீட்டின்படி, 27 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே ஒருபயனாளிக்கு வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிவாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளது. எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தால் வேளாண் தொழிலுக்கு கூலி ஆள்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என்றாா்.‘

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.