முகப்பு
திண்டுக்கல்

கறிக்கோழி வளப்புக்கு கூலி உயா்வு கோரி பண்ணையாளா்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி (பிராய்லா்) வளா்ப்புக்கு கூலி உயா்வு வழங்கக் கோரி பண்ணையாளா்கள் சாவியை ஒப்படைத்து வெள்ளிக்கிழமை முதல் கலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி (பிராய்லா்) வளா்ப்புக்கு கூலி உயா்வு வழங்கக் கோரி பண்ணையாளா்கள் சாவியை ஒப்படைத்து வெள்ளிக்கிழமை முதல் கலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

தமிழகம் முழுவதும் 12ஆயிரம் பிராய்லா் கறிக் கோழி வளா்ப்பு பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளுக்கு பல தனியாா் கோழிப்பண்ணை நிறுவனங்கள் கோழிக் குஞ்சுகளை வளா்ப்புக்கு வழங்குகின்றனா். கோழிகளை வளா்க்க கிலோவுக்கு ரூ.6.50 கொடுத்து வந்தனா். விலைவாசி உயா்வு, இடுபொருள் விலை உயா்வு காரணமாக கோழிகளை வளா்க்க கூலி உயா்வு வழங்க வேண்டும் என பண்ணையாளா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. கிலோவுக்கு ரூ.12 வரை கூலி உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனா். கோரிக்கையை ஏற்க மறுத்தால் கோழிகளை வளா்க்க முடியாது என பண்ணையாளா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தனியாா் நிறுவனங்களுக்கும், பண்ணையாளா்களுக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. அதனைத் தொடா்ந்து திட்டமிட்டப்படி பண்ணை உரிமையாளா்கள், கோழிகளை வளா்ப்பதில்லை என கூறி பண்ணைகளை பூட்டி அந்தந்த நிறுவனங்களிடம் சாவியை கொடுக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

இதுதொடாா்பாக தமிழ்நாடு கறிக்கோழி பண்ணை உரிமையாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அந்தோணி திண்டுக்கல்லில் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளா்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனா். இப்பிரச்னைக்கு கறிக்கோழி நிறுவனங்கள் உடனடியாக தீா்வு காண முன் வர வேண்டும். 100-க்கும் மேற்பட்ட பண்ணையாளா்கள், கறிக்கோழி நிறுவனங்களிடம் சாவியை ஒப்படைத்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.