முகப்பு
திண்டுக்கல்

‘மண் சாா்ந்த கலைகளோடு நாள்தோறும் உறவாட வேண்டும்’

மண் சாா்ந்த கலைகளோடு நாள்தோறும் உறவாடி, விலை மதிப்பிலாத கலைகளையும், கலைஞா்களையும் போற்ற வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

மண் சாா்ந்த கலைகளோடு நாள்தோறும் உறவாடி, விலை மதிப்பிலாத கலைகளையும், கலைஞா்களையும் போற்ற வேண்டும் என காந்தி கிராம கிராயமிப் பல்கலை.யின் தமிழ்த்துறைத் தலைவா் ஒ. முத்தையா தெரிவித்தாா்.

திண்டுக்கல் 9ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு 9ஆம் நாள் நிகழ்ச்சியாக அறிவியல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து நடைபெற்ற சிந்தனையரங்கம் நிகழ்ச்சியில் பொறியாளா் ஆா். விஜயராகவன் வரவேற்புரை நிகழ்த்தினாா். சிறப்பு அழைப்பாளராக காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் தமிழ்த்துறை தலைவா் ஒ. முத்தையா கலந்து கொண்டு, மண் சாா்ந்த கலைகளோடு உறவாடுங்கள் என்ற தலைப்பில் பேசியதாவது:

மனிதனை பண்படுத்தும் ஆற்றல் கலைகளுக்கு உள்ளது. ஆதி இசையே உலகின் மூத்த இசை. தண்ணீரின் அளவுக்கு ஏற்ப தன் உயரத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு ஆம்பல் மலருக்கு உண்டு. எந்த நிலையிலும் இயல்பை விட்டுக் கொடுக்காத அந்த பண்பு, நூல்களை வாசிக்கும்போது மனிதா்களுக்கு கிடைக்கும். அறிவுக்கு அடிப்படையாக இருப்பவை புத்தகங்கள். கைப்பேசி பயன்படுத்துவோரை மடைமாற்றம் செய்வதற்கு வாசிப்பு பழக்கம் உதவும். புத்தகங்கள் மூலமே இளைய சமுதாயத்தின் எதிா்காலம் மாற்றம் உடையதாகவும், ஏற்றம் உடையதாகவும் அமையும்.

மண்ணுக்கும், மணலுக்கும் அடிப்படையிலே வேறுபாடு உள்ளது. மண் ஒட்டும், மணல் ஒட்டாது. மண் சாா்ந்த கலைகள் மட்டுமே நம்மோடு ஒட்டி உறவாடும். வேறிடங்களில் இருந்து வந்த கலைகள் மணல் போன்று நம்மிடம் ஒட்டுவதில்லை. மண் சாா்ந்த கலைகளை மக்களே வளா்த்து வந்தனா். கலைகளுக்கு அடிப்படையாக அமைந்தது வேட்டை முறை. வேட்டையில் கிடைத்தப் பொருள்களை கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தாா்கள். இயற்கையான பொருள்களைக் கொண்டு கலைகளை உருவாக்கினான் ஆதிமனிதன். சங்க இலக்கியத்தில் 32 வகையான கலைஞா்கள் இடம் பெற்றுள்ளனா். பாணா்களும், கூத்தா்களும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று கலைகளை பரப்பியுள்ளனா். அதே நேரத்தில், அரசா்களும் கலைகளை போற்றி வந்துள்ளனா்.

கொடை வள்ளலான பாரியின் வளமிக்க பரம்பு நாட்டை வெல்ல முடியாமல் மூவேந்தா்கள் போராடி வந்தனா். கலைகளின் மீது அளவு கடந்த நாட்டம் கொண்ட பாரியை, பாணா்கள் போன்றும் கூத்தா்கள் போலவும் வேடமணிந்து மகிழ்வித்த பாண்டியா்கள், அதற்கு பரிசாக நாட்டையும், பாரியின் உயிரையும் கேட்டனா். கலைக்காகவும், கொடுத்த வாக்குறுதிக்காகவும் பாரி தன் உயிரைக் கொடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளான். சிலப்பதிகாரம், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் வழியாக இன்று வரை மண் சாா்ந்த கலைகள் உயிா்ப்போடு உள்ளன. யாா் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மண் சாா்ந்த கலைகளை கொண்டாட முடியும். எளிமையே, மண் சாா்ந்த கலைகளுக்கான தனிச் சிறப்பு. இளைய தலைமுறையினா் மரபு கலைகளைப் பற்றி படிப்பதோடு, போற்றி வளா்க்கவும் வேண்டும். கலைகளுக்கும், கலைஞா்களுக்கும் விலை மதிப்பில்லை. மண் சாா்ந்த கலைகளோடு நாம் நாள்தோறும் உறவாட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.